கரோனா பரவலைக் கட்டுப்படுத்த புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் சென்னை கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 10ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோன்று நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டை கொண்டாட வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வருவது வழக்கம். இதனையொட்டி பிரபல ஓட்டல்கள், ரிசார்ட்களில் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கரோனா பரவல் காரணமாக நீலகிரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, "உருமாறிய கரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா தலங்கள் வழக்கமாக மாலை 6 மணிக்கு மூடப்படுவதால் அங்கு புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட முடியாது.
பொது இடங்கள் , சொகுசு விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டம் நடத்தக் கூடாது. தடையை மீறி இரவு 10 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடக்கும் சொகுசு விடுதிகள், ஓட்டல்களுக்கு சீல் வைத்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை கண்காணிக்க வருவாய்த்துறை மற்றும் காவல்துறையைச் சேர்ந்த தனி குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். இந்த தடை வருகின்ற ஜனவரி 3ஆம் தேதி வரை அமலில் இருக்கும்" என எச்சரித்தார்.
இதையும் படிங்க: நேற்று தூய்மைப் பணியாளர், இன்று பஞ்சாயத்து தலைவர் - நெகிழ வைத்த கேரள பெண்!