நீலகிரி: குன்னூர், கோத்தகிரி, உதகை, குந்தா ஆகியப் பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட கிராமங்களில் படுகரின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் கோத்தகிரி அருகே உள்ள பெத்தளா கிராமத்தில், குலதெய்வக் கோயிலான எத்தையம்மன் கோயிலை படுகர் இன மக்கள் காலம் காலமாக வழிபட்டு வருகின்றனர்.
அறநிலையத்துறைக்கு எதிராகப் படுகர் இனமக்கள்
இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை, இந்தக் கோயிலை தங்கள் கட்டுப்பாட்டில் எடுப்பதற்காக நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இதனால், கிராம மக்கள் ஒன்று திரண்டு முதற்கட்டமாக, இந்து சமய அறநிலையத்துறையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்பு உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை நடத்தினர். இச்சூழலில், இன்று கோத்தகிரி காந்தி மைதானத்தில் ஒன்றுதிரண்ட படுகர் இன மக்கள் 500-க்கும் மேற்பட்டோர், அவர்களின் பாரம்பரிய ஆடை அணிந்து வந்து, அரசைக் கண்டித்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் கிஷோர் குமார் கலந்து கொண்டார். இதனிடையில் செய்தியாளரிடம் பேசிய அவர், "எத்தையம்மன் கோயில் உள்பட, நீலகிரி மாவட்டத்தில் உள்ள 49 கோயில்களை அரசு கையகப்படுத்த முயற்சி எடுத்து வருகிறது. இதனைத் தவிர்க்க வேண்டும்.
தமிழ்நாட்டில் கோயில்களில் உள்ள தங்கத்தை உருக்கி, வங்கியில் வைத்து கொள்ளையடிக்கும் நோக்கில் செயல்படும் அரசைக் கண்டித்து அக்டோபர் 26ஆம் தேதி மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பொள்ளாச்சி பாலியல் வழக்கு - பாதிவழியில் நின்ற கைதானவர்கள் இருந்த காவல் துறை வாகனம்; நடந்தது என்ன?