நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் படுகர் சமுதாய மக்களின் 300 ஆண்டு கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில், நீலகிரி ஆவண காப்பகம் சார்பில் உதகையில் படுகர் சமுதாய மக்களின் காலண்டர் வெளியீட்டு விழா இன்று (ஜனவரி 8) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா, தி இந்து என். ராம் ஆகியோர் கலந்து கொண்டு படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய காலண்டரை வெளியிட்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, "தங்களுக்கென தனி பாரம்பரியம் கலாசாரத்துடன் வாழ்ந்து வரும் படுகர் சமுதாய மக்கள், 300 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களுக்கு சம உரிமை அளித்தனர். திமுக ஆட்சி அமைந்தவுடன் படுகர் சமுதாய மக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்" என்றார்.