நீலகிரி மாவட்டம் சுற்றுலா நகரமான உதகையில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை காலத்தில் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க தோட்டக்கலைத்துறை சார்பாக மலர் கண்காட்சி, காய்கறி கண்காட்சி, பழக் கண்காட்சி போன்றவைகள் நடத்தப்படும்.
இந்நிலையில் உதகையில் உள்ள அரசு ரோஜா பூங்காவில் 17ஆவது ரோஜா கண்காட்சி வருகின்ற மே மாதம் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியை முன்னிட்டு ரோஜா பூங்காவில் உள்ள 30ஆயிரம் ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணி இன்று தொடங்கியது.
கவாத்து செய்யும் பணியினை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். இந்த பணி இன்று முதல் ஒருவாரம் நடைபெற உள்ளது. தற்போது கவாத்து செய்யும் ரோஜா செடிகள் மீண்டும் நன்றாக வளர்ந்து வருகின்ற ஏப்ரல் மாதத்தில் ரோஜா மலர்கள் பூக்க தொடங்கிவிடும்.
குறிப்பாக ரோஜா மலர் கண்காட்சியின்போது அனைத்து ரோஜா செடிகளிலும் மலர்கள் பூத்து குலுங்கும். பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பல வண்ணங்களில் லட்சக்கணக்கான ரோஜாக்களை கண்டு ரசிக்க முடியும். இதனிடையே வெட்டபடும் ரோஜா செடிகளில் பூத்துள்ள ரோஜா மலர்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசமாக வழங்கபட்டுவருகிறது. கண்கவர் வண்ணங்களில் உள்ள ரோஜா மலர்களை சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர்.
இதையும் படியுங்க: பண்டைய மகளிர் பயன்படுத்திய அணிகலன்கள் கண்காட்சி தொடக்கம்