நீலகிரி: குன்னூர் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில், இன்று 85 இளம் ராணுவ வீரர்கள் சத்தியபிரமாணம் எடுத்துக்கொண்டனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ முகாமில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு, மெட்ராஸ் ரெஜிமென்ட் ராணுவப் பயிற்சி வழங்கப்படுகிறது.
பயிற்சியை பெறும் வீரர்கள், இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் உள்ள முகாம்களுக்குப் பணிபுரிய அனுப்பிவைக்கப்படுவர். கடின பயிற்சி முடித்த இளம் ராணுவ வீரர்களில் 85 பேர், பயிற்சி முடித்து, ராணுவ வீரர்களாய் பணிபுரிய சத்தியப்பிரமாண நிகழ்ச்சி இன்று நடந்தது.
பயிற்சிக்குச் செல்லும் ராணுவ வீரர்கள், பகவத்கீதை, பைபிள், குரான் புத்தகங்கள், தேசியக்கொடி மீது, உப்பு உட்கொண்டு சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.
ராணுவ பேண்ட் இசைக்கேற்றவாறு ரெஜிமென்ட் கொடி, தேசியக்கொடி கம்பீரமான அணிவகுப்பு நடந்தது. மேலும் ராணுவ பேண்ட் இசைக்கு ஏற்றவாறு இளம் ராணுவ வீரர்களின் கம்பீர அணிவகுப்பு நடைபெற்றது.
வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தின் துணைத் தலைவர் கர்னல் குமாரதாஸ் தலைமை வகித்து சிறந்த வீரர்களுக்குப் பதக்கங்கள், கோப்பைகள் வழங்கி கவுரவித்தார்.
மேலும் சிறப்பாகப் பயிற்சி அளித்த பயிற்சியாளர்களுக்கும், கேடயம் வழங்கப்பட்டது. கரோனா சூழ்நிலையிலும் மிகக் கடினமாக உழைத்த அனைத்து வீரர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கரோனா காரணமாக செய்தியாளர்களும் இளம் ராணுவ வீரர்களின் பெற்றோர்களும் பங்கேற்க அனுமதிக்கவில்லை.