நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசனகுடி மற்றும் கூடலூரை அடுத்துள்ள தேவன் எஸ்டேட், தேவர்ச்சோலை பகுதிகளில் கடந்த ஆண்டு டி23 என்னும் புலி 4 மனிதர்களையும், 30க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் அடித்துக் கொன்றது. இந்த புலியைப் பிடிக்க பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. இதனையடுத்து வனத்துறை சார்பாக புலியை உயிரோடு பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி சந்திரன் என்பவரை தேவர்சோலை பகுதியிலிருந்த T23 புலி அடித்துக் கொன்றது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 7 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு T23-புலியை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக வனத்துறை உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 24-ம் தேதி முதல் தலைமை வனப்பாதுகாவலர், 5-க்கும் மேற்பட்ட வனக் கால்நடை மருத்துவர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வன பணியாளர்கள், மோப்ப நாய்கள், கும்கி யானைகள் என அனைவரும் T23 புலியை உயிருடன் பிடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இறுதியாக அக்டோபர் மாதம் 15-ம் தேதி மசினகுடி பகுதியில் T23 புலி மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடிக்கப்பட்டது.
உயிருடன் பிடிக்கப்பட்ட புலி மைசூர் வனவிலங்கு மறுவாழ்வு மையத்தில் வைக்கப்பட்டு தற்போது வரை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த T23 புலியை பிடிக்கச் செய்த செலவினம் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சதீஷ் என்னும் வழக்கறிஞர் கோரியிருந்தார். இதற்கு வனத்துறை சார்பில் செப்டம்பர் மாதம் 24-ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 15-ம் தேதி வரை 23 -நாட்கள் T23 புலியை பிடிக்க சுமார் 11 லட்சத்து 34 ஆயிரத்து 105 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக வனத்துறை பதில் அளித்துள்ளது.
இந்த புலியை பிடித்தல் மற்றும் பராமரிக்க வைத்து இரும்பு கூண்டுகள் வைத்தல், வாகன வாடகை, உபகரணங்கள் வாங்கியது, மருந்துகள் வாங்கியது, கூடலூர் ஊட்டி மற்றும் மசினகுடி கோட்ட பணியாளர்கள், மருத்துவக் குழு, தன்னார்வ தொண்டு பணியாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோருக்கு தினமும் உணவு, தண்ணீர் மற்றும் தேநீர் வழங்கியது உட்பட்ட அனைத்து செலவுகளும் அடங்கும் என வனத்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: என் ஆட்சியில் யார் தவறு செய்தாலும் தண்டனை தான் - முதலமைச்சர் ஸ்டாலின்