மதுரை: தங்களுக்கு இதுவரை வழங்கி வந்த பழங்குடியின சாதிச் சான்றிதழ் கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என வலியுறுத்தி மதுரையில் காட்டுநாயக்கன் சமூகத்தைச் சார்ந்த மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவோம் என்று அச்சமூக மக்கள் தெரிவித்தனர்.
மதுரை மாவட்டம் பரவை அருகேயுள்ள சத்தியமூர்த்தி நகரில் வாழும் மக்கள் காட்டுநாயக்கர் சமூக சான்றிதழ் வழங்க கோரி, பெரும் போராட்டத்தை நடத்தி வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக கடந்த 2024 நவம்பர் மாதம், தங்களது குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணிப்பு செய்து போராட்டம் நடத்தினர். இருந்தும் எந்தவித முடிவும் எடுக்கப்படாததால் இரண்டாம் கட்டமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளே இன்று காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
இதனையடுத்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டில்லிபாபு, சிபிஎம் புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், பரவை காட்டு நாயக்கன் சமூக கிராமத் தலைவர் வீராங்கன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர், தமிழ்நாடு மலைவாழ் சங்க மாநிலத் தலைவர் டில்லிபாபு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "சாதி சான்றிதழ் வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு குழு அமைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு அமைத்துள்ள குழு விரைவில் விசாரணை நடத்த உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறினார்.
விண்ணப்பித்த 32 விண்ணப்பங்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்க விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். அரசாணை எண் 104-இன் படி சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். ஆய்வு கமிட்டி 15 நாட்களில் விசாரணை நடத்த உள்ளதாக ஆட்சியர் கூறியுள்ளார்.
காத்திருப்பு போராட்டம் தொடரும். சாதி சான்றிதழ் கிடைக்கும் வரை போராட்டம் நடைபெறும். சாதி சான்றிதழ் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் மற்றும் மத்திய அரசிடம் புகார் தெரிவிக்க முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக நீதிமன்றத்தையும் நாட உள்ளோம்," எனக் கூறினார்.
முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காட்டு நாயக்கர் சமூக மக்கள் பாரம்பரிய பாடல்களுக்கு ஏற்றவாறு நடனம் ஆடினர். குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மத்தியில் நடனமாடியது ஆட்சியர் அலுவலகத்தில் கூடியிருந்தவர்களை கவர்ந்தது.
போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதனால் ஆட்சியர் அலுவலகம் முன்பாக பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.