நீலகிரி மாவட்டம் குன்னூர் மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்பது மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மலை ரயில் சேவை, டிசம்பர் 31ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள தென்னக ரயில்வே சேலம் கோட்ட பொது மேலாளர் ஏ.ஜி.சீனிவாஸ் சிறப்பு மலை ரயிலில் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஹில்குரோவ், ரன்னிமேடு, குன்னூர் பணிமனை ஆகியவற்றை பார்வையிட்டார். முன்னதாக, குன்னூர் ரயில் நிலையத்தில் ஊழியர்கள் சார்பில் பொது மேலாளர் ஏ.ஜி.சீனிவாஸுக்கு மலை ரயிலின் சிறப்பு லோக்கோ கோர்ட் அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, "குன்னூருக்கு மீண்டும் மலை ரயில் இயக்கப்பட்டுள்ளது.
இந்த மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சுற்றுலாப் பயணிகளின் வரவேற்பை பொறுத்து வரும் காலங்களில் குன்னூர் - ரன்னிமேடு சிறப்பு மலை ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.