17ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில், ஆங்கிலேயர் அறுவடை முடிந்தவுடன் மீதியாகும் தானியங்களையும், உலர் திராட்சைப் பழங்களையும் பயன்படுத்தி கேக் தயாரித்து கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடினார்கள். இந்த கலாசாரத்தை ஆங்கிலேயர்கள் நீலகிரிக்கு வந்த போதும் பின்பற்றினர். அவர்கள், நம் நாட்டை விட்டுச் சென்றிருந்தாலும் நீலகிரி மாவட்டத்தில் தற்போதும் அவர்களது கலாசாரம் தான் பின்பற்றப்பட்டு வருகிறது.
உதகையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர விடுதியில் சற்று வித்தியாசமான முறையில் 'கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் விழா' நடைபெற்றது. இங்கு ரம், பிராந்தி, விஸ்கி, ஒயின் போன்ற மதுபானங்களும், உலர் திராட்சை, பிஸ்தா, பாதாம், வால்நட் மற்றும் பேரீட்சைகளும் வரிசையாக பிரமாண்ட மேஜையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும், தனியார் நட்சத்திர விடுதி ஊழியர்களும் ஒன்றாகச் சேர்ந்து சுமார் 200 கிலோ எடை கொண்ட உலர் திராட்சைப் பழங்கள் மற்றும் வாசனைப் பொருட்களை ஒன்றாகச் சேர்த்து கலக்கினர்.
பின்னர், பாட்டில்களில் வைக்கப்பட்டிருந்த பல வகையான மதுபானங்களையும் அதன் மீது ஒரே சமயத்தில் ஊற்றி, அந்த கலவை ஒரு பெரிய பாத்திரத்தில் தனியாக கொட்டப்பட்டது. இந்த கலவை சுமார் ஒரு மாதம் ஊறவைக்கப்படவுள்ளது.
ஒரு மாத காலம் முடிந்தவுடன், கிறிஸ்துமஸ் சமயத்தில் இந்த கலவையுடன் மைதா, முட்டை போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டு, கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கப்படும். இந்த விநோத நிகழ்ச்சி மக்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
இதையும் படிங்க: 'ஐஐடி மாணவி தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை தேவை' - தலைவர்கள் வலியுறுத்தல்!