நீலகிரி: உதகை அருகே மஞ்சூரில் பிரபல தனியார் நிதி நிறுவனமான முத்தூட் நிறுவனத்தின் கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமானோர் நகைகளை அடகு வைத்து நிதி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு பணியாற்றி வரும் சத்திய பிரியா, நகை மதிப்பீட்டாளர் ராஜூ, காசாளர் நந்தினி, கம்பியூட்டர் ஆப்ரேட்டர் விஜயகுமார் உள்ளிட்ட 4 பேர் கடந்த 6 மாதங்களில் 81 வாடிக்கையாளர்கள் அடகு வைத்த சுமார் 380 சவரன் அசல் தங்க நகைகளை எடுத்து விட்டு, அதற்குப் பதிலாகப் போலி கவரிங் நகைகளை வைத்துள்ளனர்.
மேலும், அந்த அசல் தங்க நகைகளை வேறு வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமலேயே அவர்களது ஆவணங்களைப் பயன்படுத்தி அடகு வைத்து 98 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயைக் கையாடல் செய்துள்ளனர். இந்த மோசடியை கண்டறிந்த கிளை மேலாளர் ரவி உதகை மாவட்ட குற்றப் பிரிவு காவல்துறையில் நேற்று (ஜனவரி 11) புகார் அளித்தார்.
அதனையடுத்து சத்திய பிரியா, நகை மதிப்பீட்டாளர் ராஜூ உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மஞ்சூர் சென்ற குற்ற பிரிவு காவல்துறையினர் காசாளர் நந்தினி மற்றும் கம்பியூட்டர் ஆப்ரேட்டர் விஜயகுமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முக்கிய குற்றவாளிகளான சத்தியபிரியா, நகை மதிப்பீட்டாளர் ராஜூ ஆகியோர் தலைமறைவாகினர். அவர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர். வேலியே பயிரை மேய்ந்தது போல பிரபல நிதி நிறுவன ஊழியர்களே வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை வைத்து மோசடி செய்து 98 லட்சம் பணம் பெற்று ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: இளையதள செயலி மூலம் பணத்தை இழந்த இளைஞர்