நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக கஞ்சாப் புழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் இளம் மாணவர்கள், இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தின் காலநிலைக்கு கஞ்சா செடி நன்றாக வளருவதால் பெரும்பாலான கிராமங்களில் அவற்றை வீடுகளின் அருகேயே வளர்த்து பயன்படுத்தி வருகின்றனர். இதற்குத் தீர்வு காணும் வகையில் குன்னூரில் டிஎஸ்பி சுரேஷ் தலைமையில் தனிப்படையினர் அமைக்கப்பட்டு அவர்கள் ஆங்காங்கே சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (நவ.04) ஒரே நாளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.வெலிங்டன் எல்லைக்குட்பட்ட பெட்டட்டி சாலையில் எடப்பள்ளி அருகே உள்ள சோலையில் எட்டு பேர் சேர்ந்து கஞ்சா விற்பனை செய்து வருவதாக ரகசியத் தகவல் கிடைத்ததன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் குழு, கஞ்சா விற்ற கும்பலை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
தொடர்ந்து, அவர்களிடமிருந்து இரண்டு கிலோ 200 கிராம் கஞ்சாவைக் கைப்பற்றி அவர்களை குன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.