நீலகிரி: உதகையில் ஆண்டுதோறும் கோடை சீசனை முன்னிட்டு தென்னிந்திய கெனல் கிளப் சார்பாக தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்று காரணமாக நடைபெறாமல் இருந்த நாய்கள் கண்காட்சி இந்தாண்டு விமரிசையாக தொடங்கியது.
இந்தாண்டிற்கான 130 மற்றும் 131ஆவது நாய்கள் கண்காட்சி நேற்று (மே6) உதகை அரசு கலை கல்லூரி மைதானத்தில் தொடங்கியது. 3 நாள்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நாய்கள் வந்து கலந்துகொண்டன.
குறிப்பாக ஜெர்மன் செப்பர்டு, லேபர் டாக், கிரேடன், பீகில், ஹஸ்கி, நாட்டுநாய் வகையை சேர்ந்த கன்னி, ராஜபாளைய நாய்கள் உள்பட 59 வகையான 600க்கும் மேற்ப்பட்ட நாய்கள் கலந்துகொண்டுள்ளன. முதல் நாளான வெள்ளிக்கிழமை நாய்களின் உடல் அழகு, கீழ்படிதல், பராமரிப்பு, கட்டளைகளுக்கு ஏற்ப செயல்படுதல் என்ற பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தபட்டன.
இதில் சிறப்பாக செயல்பட்ட நாய்களுக்கு பரிசு கோப்பைகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள போட்டிகளில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சார்ந்த நாய்களும் கலந்துகொள்கின்றன. அதனைக் கண்காணிக்க வெளிநாட்டு நடுவர்களும் வந்துள்ளனர்.
இந்தக் கண்காட்சியில் கலந்துகொள்ள வந்துள்ள விதவிதமான நாய்களை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
இதையும் படிங்க:தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி - 300க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்பு!