நீலகிரி: 'மலைகளின் அரசி' என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில், ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நிலவும் கோடை சீசனை அனுபவிக்க தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வருவது வழக்கமான ஒன்று.
அவ்வாறு உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க, நீலகிரி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் கோடை விழாக்கள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கடந்த 6 மற்றும் 7 ஆகிய நாட்களில் கோத்தகிரி நேரு பூங்காவில் 12வது காய்கறி கண்காட்சி உடன் கோடை விழா தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து உதகை ரோஜா பூங்காவில் கடந்த 13ஆம் தேதி தொடங்கிய 18வது ரோஜா கண்காட்சி, தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்று நிறைவு பெற்றது. இதனைத்தொடர்ந்து, கோடை விழாவின் முக்கிய நிகழ்வான உலகப்புகழ் பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 125வது மலர் கண்காட்சி, இன்று தொடங்குகிறது.
இவ்வாறு இன்று தொடங்கும் மலர் கண்காட்சி, வருகிற 23ஆம் தேதி வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. இந்த மலர் கண்காட்சியைக் காண வரும் சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காகப் பல்வேறு வகையிலான மலர்கள் வித்தியாசமான அலங்காரங்கள் உடன் வரவேற்கத் தயாராக உள்ளது.
முக்கியமாக, 80 ஆயிரம் கார்னேஷன் மலர்களைக் கொண்டு சுமார் 45 அடி உயரத்தில் தோகை விரித்தாடும் பிரமாண்ட மயில் வடிவமைப்பு மலர் கண்காட்சியின் சிறப்பம்சமாக அமைக்கப்பட்டு உள்ளது. அது மட்டுமல்லாமல், வண்ண வண்ண கார்னேசன் கொய் மலர்களைக் கொண்டு மாநிலச் சின்னங்களான மரகதப் புறா, வரையாடு, பனை மரம், செங்காந்தள் மலர் ஆகியவை வடிமைக்கப்பட்டுள்ளன.
மேலும், அழிந்து வரும் வனவிலங்கான சீட்டா மற்றும் நீர் வாழ்வினமான டால்பின் போன்ற வடிவமைப்புகள் என சுமார் இரண்டு லட்சம் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அலங்காரங்கள் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், வன விலங்குகளின் வடிவமைப்புகள், பட்டாம்பூச்சி, சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவை இனங்களின் வடிவமைப்புகளும், அரசு தாவரவியல் பூங்கா உருவாகி 175வது ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி 175th Year Garden என்ற வடிவமைப்பும்,
125வது மலர்க் கண்காட்சியின் வடிவமைப்பு ஆகிய அனைத்தும் கார்னேஷன் கொய் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், உதகையில் இன்று தொடங்கும் 125வது மலர் கண்காட்சியினைக் கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், நீலகிரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து நீலகிரி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் முதன்முறையாக தேயிலை கண்காட்சி..!