தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ளது வெங்கரை ஊராட்சி. இந்தப் பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இந்த ஊராட்சியில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிலை கடந்த பல வருடங்களாக இருந்துவந்தது.
இப்பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் ஏழை மக்கள் என்பதால் நோய் பாதிப்பு ஏற்படும் பொழுது தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை செய்ய முடிவதில்லை. இதனை கருத்தில் கொண்டு வெங்கரை ஊராட்சியில் அமைக்கப்பட்ட இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பல வருடங்களாக பொதுமக்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த சில வருடங்களாக இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முறையாக பராமரிக்கப்படாமலும், போதுமான டாக்டர், நர்சுகள் இல்லாததால் இப்பகுதியிலுள்ள ஏழை மக்கள் முறையான சிகிச்சை பெற முடியாமலும் போய்விடுகிறது.
மேலும், இந்த இந்த சுகாதார நிலையம் அருகில் பாழடைந்த ஒரு கட்டடம் எந்த நேரத்திலும் இடிந்துவிழும் நிலையில் உள்ளது. மோசமான நிலையில் உள்ள இந்தக் கட்டடத்திற்குள் சென்று ஆபத்தை உணராமல் இப்பகுதியில் உள்ள சிறு குழந்தைகள் விளையாடி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இந்த கட்டடத்திற்குள் சென்ற ஒரு மாட்டின் மேலே கட்டடத்தில் உள்ள சிமெண்ட் காரை இடிந்து விழுந்ததில் அதே இடத்தில் அந்த மாடு பலியானதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே பாழடைந்த இந்தக் கட்டடத்தை இடித்து தரவும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான மருத்துவர்கள், நர்சுகளை நியமிக்க வேண்டியும் இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிங்க: கர்ப்பிணி பெண்ணின் வயிற்றுக்குள் ஊசி வைத்து தைத்த இருவர் பணியிடை நீக்கம்...