தஞ்சாவூர்: கட்டாய மதமாற்ற பிரச்னையில் அதனை தடுத்து, குரல் கொடுத்ததற்காக கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 05ம் தேதி திருபுவனம் இராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கினை தற்போது தேசிய புலனாய்வு முகமையான NIA விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் இதுவரை 18 பேர் மீது குற்றம்சாட்டி, குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்துள்ள நிலையில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். எஞ்சிய ஐந்து பேர் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவித்து அவர்களை பிடிக்க தகவல் அளிப்பவர்களுக்கு, தலா ரூபாய் 5 லட்சம் வெகுமதி தருவதாகவும் NIA அறிவித்துள்ளது.
இந்த நிலையில், கடந்த 23ஆம் தேதி ஞாயிறு அன்று திருபுவனம் இராமலிங்கம் படுகொலை வழக்கில், தலைமறைவு குற்றவாளிகளாக உள்ள ஐந்து நபரிகளின் வீடுகள் மற்றும் அவர்களுடைய நண்பர்கள், உறவினர்கள் வீடுகள் என 9 மாவட்டங்களில் 24 இடங்களில் NIA அலுவலர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அதன் ஒருபகுதியாக, கும்பகோணம் மேலாக்காவேரி இஎஸ்எம்பி நகர் பகுதியில் உள்ள இவ்வழக்கில் தலைமறைவு குற்றவாளிகளில் ஒருவரான அப்துல் மஷீதின் வீட்டிலும் இந்த சோதனை நடைபெற்றது. அப்போது வீட்டில் மஷீதின் மனைவியும், தஞ்சை மாவட்ட பெண்கள் இந்திய இயக்கம் (Women India Movement) தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தலைவருமான நஸ்ரத் பேகமும் (39) அவரது வயதான தாயாரும் மட்டும் இருந்துள்ளனர்.
மேலும், காலை 05.30 மணி முதல் பிற்பகல் 01.30 மணி என பல மணி நேரம் நீடித்த சோதனையில் இவர்கள் வீட்டில் இருந்து வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் மின்னணு சாதனப் பொருட்கள், சிம் கார்டு ஆகியவை கைப்பற்றப்பட்டதாக NIA தரப்பில் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நஸ்ரத் பேகம் கூறியதாவது, ''கடந்த 23ம் தேதி ஞாயிறு அன்று எங்கள் வீட்டிற்கு காலை 05.30 மணிக்கே வந்து கதவை தட்டிய என்ஐஏ அலுவலர்கள், எந்த அனுமதியும் இல்லாமல் சோதனை மேற்கொண்டனர்.
மேலும், வீட்டிற்குள் வந்த உடனேயே எனது அலைபேசி மற்றும் எனது தாயாரின் அலைபேசி ஆகியவற்றை பறித்து வைத்துக் கொண்டனர். வீட்டில் ஆண்கள் யாரும் இல்லையே உதவிக்கு யாரையாவது அழைக்கிறேன் என்றதற்கும் அனுமதிக்கவில்லை. மாறி மாறி மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் பலவிதமான கேள்விகளை கேட்டும் அவர்களது சோதனையினை நான் பார்க்க முடியாதபடியும் செய்தனர்.
சுமார் 8 மணி நேரம் நீடித்த இந்த சோதனையில், வெளிநாட்டு கரன்சிகள் எங்கள் வீட்டில் கைப்பற்றியதாகவும், மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறி என்னை வலுக்கட்டாயப்படுத்தி கையொப்பம் பெற்றுச் சென்றனர்.
எங்களிடம் வெளிநாட்டு கரன்சிக்கு வழியில்லை, சோதனைக்கு வந்த அலுவலர்களே அதனை கொண்டு வந்து எங்கள் வீட்டில் பறிமுதல் செய்ததாகக் கூறி என்னிடம் வற்புறுத்தி கையொப்பம் பெற்றுச் சென்றனர். இவ்வழக்கில், என் கணவரை பொய்யாக சேர்த்து இருப்பதைப் போல, என் மீதும் பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யவும் முயற்சிக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெரியவருகிறது" என பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார்.
இதையும் படிங்க: மின் துண்டிப்பை கண்டித்து போராட்டம்! பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு - 3 பேர் பலி!