தஞ்சாவூர்: மயிலாடுதுறையில் இருந்து ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, நாமக்கல், ராசிபுரம் வழியாக சேலத்திற்கு செல்லும் புதிய ரயில் தஞ்சாவூர் ரயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இன்று ஆக. 28 முதல் இயக்கப்படுகிறது.
கும்பகோணம் மக்கள் பயன்பெறும் மயிலாடுதுறை - சேலம் விரைவு ரயில் கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு வந்த போது, அரசு தலைமை கொறடா கோ.வி.செழியன், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ. ராமலிங்கம், கும்பகோணம் அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் தஞ்சை மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் ஆகியோர் இணைந்து புதிய ரயிலுக்கு மாலை அணிவித்து அதை வரவேற்றனர்.
மேலும் லோக்கோ பைலட், உதவி பைலட் மற்றும் கார்டு ஆகியோருக்கும் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பை அளித்தனர். தினசரி ரயிலான இந்த விரைவு ரயில், மயிலாடுதுறையில் இருந்து காலை 06:45 மணிக்கு கும்பகோணம் சென்று, பிற்பகல் 01.45 மணிக்கு சேலம் சென்றடையும்.
பின் மறு மார்க்கத்தில் சேலத்தில் இருந்து பிற்பகல் 02.05 மணிக்கு புறப்படும் இந்த ரயில், இரவு 08.40 மணிக்கு கும்பகோணம் வந்து சேரும். அதைத் தொடர்ந்து 09.20 மணிக்கு மயிலாடுதுறையை மீண்டும் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: Onam Festival : விழாக் கோலம் பூண்ட தோவாளை பூ மார்க்கெட்.. விடிய விடிய குவிந்த பொதுமக்கள்!