கஜா புயலில் டெல்டா மாவட்டங்கள் கடும் பாதிப்படைந்த நிலையில் தஞ்சை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியான பட்டுக்கோட்டை அதிகளவு பாதிப்படைந்துள்ளது. அதனால் இப்பகுதியில் உள்ள கிராமங்களில் தென்னை, மா, பலா, வாழை என அனைத்தும் முற்றிலுமாக சேதமடைந்தன.
விவசாயத்தை மட்டுமே நம்பி இருந்த இந்தக் கிராம மக்கள் தற்போது வாழ்வாதாரத்தை இழந்து தங்களது எதிர்கால வாழ்க்கை என்ன ஆகுமோ என்ற கவலையில் இருந்து வருகின்றனர்.
இச்சூழலில் தமிழ்நாட்டில் தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்தக் கிராம மக்கள் வாக்களிக்கச் செல்லாமல் தவிர்க்கும் நிலை உருவானது. இதையடுத்து சில சமூக செயற்பாட்டாளர்கள் வற்புறுத்தியதன் பேரில் இக்கிராம மக்கள் வாக்களித்தனர்.
இந்தப் பகுதி மக்களின் மனநிலையை அறிந்துகொள்ள நாம் தொடர்பு கொண்டு கேட்ட போது, 'இந்தத் தேர்தல் எங்களுக்கு ஒரு நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற ஆர்வம் இல்லாமல் இருந்தத் தேர்தல்.
கஜா புயலில் அதிகம் பாதிக்கப்பட்டப் பகுதி எங்கள் பகுதிதான். இதில் எங்கள் பகுதியில் உள்ள அனைத்து மரங்களும் அழிந்துவிட்டன. விவசாயம் பொய்த்துப் போய்விட்டது, எங்களின் நிலை என்னவென்று தெரிந்துகொள்ளக்கூட அரசியல்வாதிகளோ அலுவலர்களோ எங்கள் பகுதிக்கு வரவில்லை.
குடிக்கக்கூட தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டோம். இப்படி இருக்கையில் வாக்குக் கேட்க மட்டும் அரசியல்வாதிகள் வந்தனர். இது எங்களின் மனநிலையை மிகவும் புண்படுத்தியது.
இதனால் நாங்கள் ஒவ்வொருவரும் இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கடமை ஆற்ற வேண்டும் என்ற நோக்கத்துக்காகத்தான் வேண்டா வெறுப்பாக வாக்களித்தோம்' என்று ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.