தஞ்சாவூர்: தஞ்சை நீலகிரி தோட்டம் கபிலன் நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீவித்யா. சிங்கப்பூரில் வசித்து வரும் இவருக்குத் தஞ்சையில் சொந்தமான இடம் கூட்டுப் பட்டாவாக இருந்துள்ளது. இதனைத் தனது பெயருக்கு தனிப்பட்டாவாக மாற்ற முடிவு செய்த இவர், தனது உறவினரான வைத்தியநாதன் என்பவர் மூலம் தஞ்சை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்து உள்ளார்.
இந்த இடத்தை அளவீடு செய்து பட்டாவை தனிப்பெயருக்கு மாற்றம் செய்ய அந்த விண்ணப்பமானது தஞ்சை வட்ட வருவாய்த்துறை சர்வேயர் ரமேஷிடம் (32) சென்றுள்ளது. இதனை அறிந்த வைத்தியநாதன், சர்வேயர் ரமேஷை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது பட்டாவை மாற்றம் செய்வதற்கு 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் எனவும், இனிமேல் எனது தொலைப்பேசிக்குத் தொடர்பு கொள்ள வேண்டாம் எனவும், பாபநாசம் தாலுகா புளியங்குடி கிராமத்தை சேர்ந்த மகேந்திரனை தொடர்பு கொள்ள வேண்டும் என்று அவரது தொலைப்பேசி எண்ணை ரமேஷ் தெரிவித்துள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத வைத்தியநாதன், இது தொடர்பாகத் தஞ்சை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து போலீசாரின் அறிவுறுத்தலின்படி ரசாயன பவுடர் தடவிய பணத்தை எடுத்துச் சென்ற வைத்தியநாதன் நேற்று (நவ.29) இரவு மகேந்திரனைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதற்கு மகேந்திரன் தான் தஞ்சை சுற்றுலா ஆய்வு மாளிகை அருகே இருப்பதாகக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு சென்ற வைத்தியநாதன் மகேந்திரனிடம் ரசாயன பவுடர் தடவிய 5 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். அதன்பின் வைத்தியநாதன் தான் ரமேஷை பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். பின்னர் மகேந்திரன் தஞ்சை அரண்மனை அருகே காமராஜ் மார்க்கெட் பகுதியில் சலூன் கடையில் இருந்த ரமேஷிடம் அழைத்து சென்றுள்ளார். தொடர்ந்து வைத்தியநாதனிடம் வாங்கிய பணத்தை மகேந்திரன், ரமேஷிடம் கொடுத்துள்ளார்.
இதற்கிடையில் தொடர்ந்து கண்காணித்து வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகோபால், ஆய்வாளர்கள் பத்மாவதி, சரவணன் மற்றும் தலைமை காவலர்கள் அருள் ஆரோக்கியம், தென்றல் உள்ளிட்ட போலீசார் இருவரையும் கையும் களவுமாக பிடித்து வழக்குப் பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து இருவரையும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தஞ்சை பெரிய கோயிலுக்கு போறீங்களா? 'டிரஸ் கோட்' என்னனு தெரிஞ்சுக்கோங்க..