தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே சோழபுரம் போலி நாட்டு வைத்தியர் கேசவமூர்த்தி, அசோக்ராஜ் மற்றும் முகமது அனாஸ் ஆகிய இரு இளைஞர்களுக்குக் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களை வழங்கி, அவர்களை ஓரினச் சேர்க்கைக்குப் பயன்படுத்தியதுடன், கொடூரமான முறையில் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து தன் வீட்டிலேயே புதைத்து மறைத்து வைத்தார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கேசவமூர்த்தி வீட்டிலிருந்து முக்கிய விஐபிக்கள் உள்ளிட்ட 194 பெயர்கள் மற்றும் அலைபேசி எண்களுடன் கூடிய ரகசிய டைரி கேசவமூர்த்தி வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் பயன்படுத்தும் மருத்துவ உபகரணங்கள் இவரது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வழக்கில், இன்னும் அவிழப்படாத முடிச்சுகள் பல உள்ளதால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும் பாதிக்கப்பட்ட இரு குடும்பத்தினருக்கும் தமிழ்நாடு அரசு உரிய நிவாரணம் மற்றும் தகுதியான நபருக்கு அரசுப் பணி வழங்கிட வேண்டும். மேலும் இப்படுகொலையால் துயரப்பட்டுக் கிடக்கும் இரு குடும்பத்தினரையும், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், திருவிடைமருதூர் தொகுதி எம்எல்ஏவும், அரசு தலைமை கொறடாவுமான கோவி செழியன் உட்பட எவரும் இந்த அவலத்தைக் கண்டுகொள்ளவில்லை.
இதனைக் கண்டித்து இன்று கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு, மாவட்டச் செயலாளர் ம.க.ஸ்டாலின் தலைமையில், தஞ்சை வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி மற்றும் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி, "இரண்டு இளைஞர்களை கொடூரமான முறையில் கொலை செய்த வழக்கில் குற்றவாளியான போலி நாட்டு வைத்தியர் கேசவமூர்த்தியை பொது இடத்தில் வைத்துத் தூக்கிலிட வேண்டும்" என கூறினார்.
இதையும் படிங்க: நிலைகுலைந்த நியாயவிலைக்கடை..! உயிர் பயத்தில் ஊழியர்கள்..!