தஞ்சாவூர்: மேல உளூர், ஒரத்தநாடு மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் விவசாய வயல்களில் தண்ணீர் இல்லாமல், விளைநிலங்கள் வெடித்து பாலைவனம்போல் காட்சி அளிக்கிறது. இதனால், சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
குறுவை நெல் சாகுபடி பயிரைக் காப்பாற்ற தண்ணீரை குடத்தில் எடுத்து வந்து வயலில் ஊற்றி கருகி வரும் நெல் பயிர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் அவல நிலைக்கு தஞ்சை விவசாயிகள் தள்ளப்பட்டு உள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது. இந்த தண்ணீர் காவிரி ஆற்றின் வழியாக தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு வந்ததும் கடந்த ஜூன் 16ம் தேதி தஞ்சை, திருவாருர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் (புதுச்சேரி) மாநிலப் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இதனால் முன்கூட்டியே தண்ணீர் திறந்ததால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள், குறுவை சாகுபடிப் பணிகளில் தீவிரமாக மேற்கொண்டனர். தொடர்ந்து மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறையத் தொடங்கிய நிலையில் தஞ்சை மாவட்டம், கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் முறை பாசனம் வைத்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் கல்லணை கால்வாய் பாசனத்திற்கு உட்பட்ட மேலஉளூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் விளைநிலங்கள் பாலைவனமாக காட்சி அளிக்கிறது.
நெல் நாற்றங்கால் நடவு செய்யப்பட்டு உள்ள சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் பயிர்கள் தண்ணீர் இன்றி காய்ந்து கருகி வருகின்றன. ஏக்கர் ஒன்றுக்கு 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து நட்ட பயிர்கள் கருகி வருவதைக் கண்டு விவசாயிகள் கண் கலங்கினர்.
விளை நிலங்களைக் காப்பாற்ற அருகில் உள்ள மற்ற விவசாயியின் பம்ப் செட்டில் இருந்து குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து, ஆபத்தான நிலையில் போக்குவரத்து சாலையை கடந்து வயலில் தண்ணீர் ஊற்றி கருகும் நெல் பயிரை காப்பாற்ற விவசாயிகள் முயற்சித்து வருகின்றனர். கல்லணை கால்வாயில் தரைமட்டத்தில் கான்கிரீட் தரை தளம் போடப்பட்டதால் நீர் ஊற்று இல்லாமல், இரண்டு நாட்கள் வயலில் தண்ணீர் இல்லாமல் போனால், வயல்கள் காய்ந்து விடுவதாக விவசாயிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர். மேலும் ஆற்றில் முறை வைக்காமல் தண்ணீர் திறக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : தமிழகத்தில் நாளை முதல் 500 நியாய விலைக்கடைகளில் தக்காளி விற்பனை - அமைச்சர் பெரியகருப்பன்