திருவையாறு அடுத்த மஹாராஜபுரத்தில் சாத்தனூர் நியாயவிலைக்கடையின் கிளையாக பகுதிநேரக் நியாய விலைக்கடை உள்ளது. இந்தக்கடை வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமே திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு ரேசன் பொருட்கள் வினியோகிக்கப்படும். கடையின் விற்பனையாளர் பாலசுப்ரமணியன் நேற்று வழக்கம் போல் கடையை திறப்பதற்கு வந்துள்ளார்.
அப்பொழுது கடையின் பூட்டை கேஸ் வெல்டிங் மிஷின் கொண்டு கட் செய்து கதவை திறந்து உள்ளே இருந்த ஐந்து மூட்டை பருப்பு, ஐந்து மூட்டை சர்க்கரை, 25 பெட்டி ஆயில், 10 ஆயிரம் மதிப்பிலான தராசு ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, உடனடியாக விற்பனையாளர் பாலசுப்ரமணியன் மரூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் செந்தில் குமார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டார். பின்னர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அடையாளம் தெரியாத நபர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
வீடுகள் இருக்கும் பகுதியில் நியாய விலைக்கடை அமைக்காமல் மெயின் ரோட்டில் சுடுகாடு அருகே அமைந்துள்ளதால் இதுபோன்ற திருட்டுச் சம்பவங்கள் அமைய ஏதுவாக அமைந்துள்ளதாக அப்பகுதிமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், சம்மந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து குடியிருப்பு பகுதியில் நியாய விலைக்கடை அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: உதவி ஆய்வாளரின் வாக்கி டாக்கியை திருடிய இளைஞர்!