தஞ்சாவூர்: வைகாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் அதனைத் தொடர்ந்து உற்சவர் சனிபகவானுக்கு தேஸ்டாதேவி, மந்தாதேவி ஆகியோருடன் நேற்று (ஜூன் 4) திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக, சீர்வரிசை கொண்டு வருதல், மாலை மாற்றுதல், நலங்கு வைத்தல், ஊஞ்சல் சேவை ஆகியவை நடைபெற்றன.
பின்னர், யாகம் வளர்த்து இரு தேவியருக்கும் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்று மகா தீபாராதனை செய்யப்பட்டது. இதில், பெரும் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர். கும்பகோணம்-திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 9 கி.மீ தூரத்தில் நாச்சியார்கோயிலுக்கு முன்பு உள்ள திருநரையூர் இங்கு சோழர் காலத்தில் கட்டப்பட்ட பழம் பெரும் சிவாலயமாக விளங்கும் ஸ்ரீ பர்வதவர்த்தினி சமேத இராமநாதசுவாமி திருக்கோயிலில் பிரகாரத்தில் நவக்கிரகங்களில் ஈஸ்வரனாக போற்றப்படும் சனி பகவான் தனது இரு மனைவியர்களான தேஸ்டாதேவி, மந்தாதேவி மற்றும் இரு குழந்தைகளான மாந்தி மற்றும் குளிகன் ஆகியோருடன் குடும்ப சகிதமாய் தனி சன்னதி கொண்டு மங்கள சனியாக வேண்டுவோருக்கு வேண்டுவன வழங்குபவராக அருள்பாலித்து வருகிறார்.
வேறு எங்கும் காண முடியாதபடி தனக்கென்ற தனி கொடிமரம், பலிபீடம் காக்கை வாகனம் ஆகியவற்றுடன் காட்சியளிக்கிறார். இத்திருக்கோயிலில் மூலவர் இராமநாதசுவாமிக்கு எனத் தனி கொடிமரம் பலி பீடம் எதுவும் கிடையாது நந்தி வாகனம் மட்டுமே உண்டு. தசரத சக்கரவர்த்தி தனக்கு ஏற்பட்ட நோய் தீர, இத்தலத்திற்கு வந்து புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, வழிபட்டு நோய் நீங்கப்பெற்றதாகவும் வரலாறு.
இவரது சிலையினை வணங்கிய ரூபத்தில் சனி பகவான் சன்னதியில் முன்பு காணலாம். ஸ்ரீ இராமபிரானும் இராவணனைக் கொன்ற பின்னர் அயோத்தி செல்லும் வழியில் தந்தை தசரதர் வழிபட்ட இத்தலத்தின் பெருமை உணர்ந்து ஸ்ரீ அனுமனுடன் வழிபட்டதாக வரலாறு உண்டு. மூலஸ்தானத்தில் இராமேஸ்வரத்தில் இருப்பது போன்று ஸ்ரீ இராமநாதசுவாமியும், பர்வதவர்தினியும் தனிதனி சன்னதிகளில் காட்சி அளிக்கின்றனர்.
அனுமன் வழிபட்டதால் பிரகாரத்தில் அனுமந்த லிங்கமும் உள்ளது. இங்குள்ள நவக்கிரக மேடையில் சனிபகவானின் தந்தையான சூரியன், தனது இரு மனைவிகளான உஷாதேவி, பிரக்யுஷ்யாதேவி ஆகியோருடன் அருள் பாலிக்கிறார். இத்தலத்தில் நாள்தோறும் குளிகை நேரத்தில் சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது.
ஞாயிற்றுக்கிழமை குளிகை நேரமான மதியம் 3 மணி முதல் 4.30 மணி வரையும், திங்கள்கிழமையில் மதியம் 1.30 முதல் 3 மணி வரையும், செவ்வாய்கிழமை மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரையிலும், புதன் கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணி வரையிலும், வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 10.30 மணி வரையிலும், வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் 9 மணி வரையிலும், சனி கிழமை காலை 7.15 - 9 மணி வரையிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. இதில் சனிக்கிழமை வழிபடுவதும் மிகவும் சிறப்பு ஆகும்.
இதையும் படிங்க: 300 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் சோழர் கால கோயிலின் தேரோட்ட விழா!