மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்துவருகிறது. இதனை எதிர்த்து கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் என அனைவரும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திவருகின்றனர். போராட்டம் நடத்துபவர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தி அடக்குமுறையை கையாண்டுவருகிறது.
சென்னை பெசன்ட் நகரில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கோலம் போடும் போராட்டத்தை நடத்திய ஐந்து பெண்கள் நேற்று கைதான சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு ஆதரவாக பெண்கள் அனைவரும் கோலம் போட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்திவருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் கோலம் போட்டதற்கு கைது செய்த அதிமுக அரசு மீது கடும் கண்டனங்களும் எழுந்துவருகிறது.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அதில், "மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதும் ஆதரவு பெருகிவருகிறது. பள்ளிகளில் கூட தேசிய கீதம் பாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள், இன்று கோலப்போட்டி நடத்தியும் போராட்டங்களில் தேசிய கொடி ஏந்தி தேதிய கீதம் பாடுவதும் வரவேற்கத்தக்கது" என்று தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் ஆன்மிக அரசியல் எழுச்சி பெற்றுள்ளது என்றும் பிப்ரவரி 16ஆம் தேதி ஆன்மிக மாநாடு தஞ்சாவூரில் நடைபெறவுள்ளது எனவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: கடலூர் உள்ளாட்சித் தேர்தல் - கேஎஸ் அழகிரி வாக்குப்பதிவு