தஞ்சாவூர் மாவட்டம் மடிகை மற்றும் மூர்த்தியாம்பாள்புரம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் ஆகியோர் ஆய்வு செய்தனர். சேமிப்பு கிடங்கில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை ஆய்வு செய்த அமைச்சர் காமராஜ், விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து, விவசாயிகளிடமிருந்து எவ்வித புகாரின்றி நெல் கொள்முதல் செய்திட அலுவலர்களை அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடி செய்வதற்கு ஏதுவாக எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையை முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்தாண்டு மேட்டூர் அணையில் தொடர்ந்து 306 நாள்கள் 100 அடி தண்ணீர் இருந்தது வரலாற்று நிகழ்வாகும். விவசாயிகளின் தேவைகளுக்கேற்ப மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பு கொள்முதல் பருவத்தில் இதுவரை 26 லட்சத்து 69ஆயிரத்து 167 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நடப்பு பருவத்தில் நெல் கொள்முதல் அளவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் இதுவரை 4 லட்சத்து 29 ஆயிரத்து 598 விவசாயிகளின் வங்கி கணக்கில் 5 ஆயிரத்து 48 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் 168 கோடியே 93 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
டெல்டா மாவட்டங்களில் 412 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் 83 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் செயல்பட்டு வருகிறது. நெல் கொள்முதல் தொடர்பாக வரப்பெறும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் தேவை மற்றும் நெல் உற்பத்திக்கேற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்திட மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது" என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சாத்தான்குளம் வழக்கு: நள்ளிரவு வரை தொடர்ந்த சிபிஐ விசாரணை