தஞ்சாவூர்: இசைக்கலை, நாட்டிய கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை, கட்டிடக்கலை, போன்ற கலைகளின் பிறப்பிடமாக தஞ்சை மாவட்டம் சிறந்து விளங்குகிறது. தஞ்சாவூரை சேர்ந்த தவில் இசைக் கலைஞர் திருராமேஸ்வரம் T.B ராதாகிருஷ்ணன் (50) என்பவர் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் தவில் இசை இலவசமாக கற்றுத் தருகிறார்.
பாரம்பரியமாக உள்ள இந்த தவில் இசையை வாசிப்பவர்கள் தஞ்சையில் அரிதாகிவிட்ட காலத்தில் இந்த இசையை மீட்டுருவாக்கம் செய்யும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு தவில் இசை பயிற்சியை தனது வீட்டில் கற்றுத் தருகிறார். பள்ளி மாணவர்களும் கோடை விடுமுறை மற்றும் பள்ளி விடுமுறை சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் ஆர்வமுடன் வந்திருந்து தவில் இசை பயிற்சியை கற்று வருகின்றனர்.
தவில் வாசிப்பதற்கு அடிப்படை பயிற்சியான வாய்மொழி பாடங்கள், கட்டைப் பயிற்சி (தவில் வாசிக்க கை விரல் படிவதற்கு) ஆகிய பயிற்சிகளை வழங்கி பின்னர் தவில் வாசிப்பதற்கான பயிற்சிகளையும் முறையாக கற்றுத் தருகிறார். தஞ்சாவூரை சேர்ந்த ராதாகிருஷ்ணன், தவில் இசையில் முதுகலை பட்டம் முடித்து தற்போது தவில் இசையில் முனைவர் பட்டப் படிப்பு படித்து உள்ளார்.
இதையும் படிங்க : எல்லா கல்லூரிக்கும் ஒரே நாளில் தேர்வு - அமைச்சர் பொன்முடி புதுத் திட்டம்!
திருவையாறு அரசு இசைக் கல்லூரியில் தவில் ஆசிரியராக கடந்த 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். பல்வேறு தனியார் அமைப்புகள் மூலம் விருதுகளையும் பெற்று உள்ளார். இது குறித்து தவில் வித்வான் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, "தஞ்சாவூர் மாவட்டம் இசைக்கு பெயர் பெற்ற ஊர், அதிலும் குறிப்பாக உலகளவில் தஞ்சாவூர் நாதஸ்வரம், தஞ்சாவூர் தவில் சிறப்பு வாய்ந்ததாகும்.
தஞ்சாவூரில் இளைய தலைமுறைக்கு தவில் இசையை கொண்டு செல்லும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக கற்றுத் தருவதாகவும், பாரம்பரியமான இக்கலையை விட்டு விடக்கூடாது என்பதால் தவில் வாசிப்பவர்கள் தங்களது குழந்தையை தவில் வாசிக்க பயிற்சி கற்று கொடுக்கின்றனர்.
கைத்தொழில் கற்றுக் கொள்வதால் வாழ்வாதாரத்திற்கு உதவுகிறது. கடந்த காலங்களில் குருகுலவாச முறைப்படி தவில் கற்றுக் கொள்ள குறைந்தது 5 வருட காலம் ஆகலாம். தற்போதைய கால கட்டத்தில் பட்டய படிப்பு, பட்டப்படிப்பு என மூன்று வருடங்கள் படிப்பு கல்லூரிகளில் வந்துவிட்டதால் மாணவர்களின் திறமையை அறிந்து பயிற்சி அளிப்பது குருவின் அத்தியாய பணியாகும்" என்று தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தவில் வித்வான்கள் தவில் வாசித்து வெளிநாடுகளுக்கும் தவில் கலையை கொண்டு சென்று உலக அளவில் தவில் இசையின் பெருமையை எடுத்துரைப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'கல்வி பயில நாங்க இருக்கோம்; பள்ளிக்கூடத்தை காணோம்' - தஞ்சாவூரில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்