தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், திருவோணத்தை அடுத்துள்ள வாட்டாத்தி கோட்டை காவல்துறை சரகத்திற்கு உட்பட்ட நெய்வ விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகள் ஐஸ்வர்யா (20). இவர் திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஐஸ்வர்யாவை அவரது உறவினர்கள் பல்லடத்திற்குச் சென்று, அவரை சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளனர். சொந்த ஊருக்கு வந்த அன்றிரவு ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி, உறவினர்கள் அவரது உடலைச் சுடுகாட்டிற்குக் கொண்டு சென்று, காவல்துறைக்குத் தெரியாமல் எரித்து விட்டதாகக் கூறப்படுகிறது
இந்த நிலையில், ஐஸ்வர்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படும் இளைஞர் நவீன் (19), வாட்டாத்தி கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், "வேறு சமூகத்தைச் சேர்ந்த நானும், ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். இதைத் தெரிந்து கொண்ட ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் மற்றும் உறவினர்கள், ஐஸ்வர்யாவைச் சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர் இறந்து விட்டதாகத் தெரிய வருகிறது" என்று புகார் அளித்தார்.
இது குறித்து நடந்த விசாரணையில், வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்து திருமணம் செய்ததால், இளம்பெண் கொலை செய்யப்பட்டார் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள், தாய் ரோஜா ஆகிய இருவரையும் காவல்துறை கடந்த (ஜன.10) கைது செய்த அவர்களைப் பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.பின்னர், இருவரும் திருச்சி மத்தியச் சிறைக்கு அடைக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத், தலைமையில் நடத்திய விசாரணையின் அடிப்படையில் நேற்று (ஜன 12) ஐஸ்வர்யாவின் உறவினர்கள் சின்ராஜ் ((31), முருகேசன் (34) செல்வம் என்கிற திருச்செல்வம் (39) ஆகிய 3 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து, நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் பெருமாளின் உறவினர்கள் ரெங்கராஜ் (56), சுப்ரமணி (56), பிரபு (36), ஆகிய 3 பேரையும் இன்று (ஜன 13)கைது செய்த காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இக்கொலை வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்குச் சாகும் வரை சிறைத் தண்டனை - போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!