தஞ்சாவூர் அருகே முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் நான்காம் படை வீடான சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் வந்து வேண்டுவோருக்கு வேண்டுவன அருளும் கருணாமூர்த்தியாக விளங்கிவரும் சுவாமிமலை திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழா ஏப்ரல் 13ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.
அன்று முதல் தினமும் காலை மாலையில் பல்வேறு வாகனத்தில் சண்முகநாதன் வள்ளி தெய்வானையுடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதில் இரண்டாம் நாள் பல்லக்கில் வீதி உலாவும், மூன்றாம் நாள் பூத வாகனத்தில் வீதி உலாவும், நான்காம் நாள் ஆட்டுக்கிடா வாகனத்தில் வீதி உலாவும் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் முக்கிய நிகழ்ச்சியான ஒன்பதாம் நாள் இன்று சிறப்பு அலங்காரத்தில் சண்முகநாதன் வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளிய திருத்தேரோட்டம் நடைபெற்றது. இந்தத் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனர். இந்நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை துணை ஆணையர், செயல் அலுவலர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.