தஞ்சாவூர் மாவட்டத்தினை பிரித்து கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட புதிய வருவாய் மாவட்டம் அமைக்கக்கோரி கடந்த 25 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசிற்கு இப்பகுதி மக்கள், வணிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அம்மாவட்டத்தை அமைக்கத்தக்க அனைத்து தகுதிகளையும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை தென்னகத்து கும்பமேளாவான மகாமக பெருவிழா காணும் நகரான கும்பகோணம் தஞ்சை மாவட்டத்தில் மிகப்பெரிய ஆன்மிக சுற்றுலா, பெரும் வணிக மையமாக விளங்குகிறது.
இதனை காட்டிலும் குறைவான தகுதிகளை கொண்ட பல மாவட்டங்கள் பிரித்து அறிவிக்கப்பட்டது. ஆனால் கும்பகோணம் பெயர் இதில் இடம் பெறவில்லை. இதற்கிடையே கடந்த ஆண்டு ஜுலை மாதம் சட்டமன்றத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கும்பகோணம் மாவட்டம் அமைப்பது பரிசீலனையில் உள்ளது என்றார். இருப்பினும் அதன் பிறகும் பல புதிய மாவட்டங்கள் அறிவிப்பு வெளியானது. அதிலும் கும்பகோணம் பெயர் இடம் பெறவில்லை.
இந்நிலையில், ஓராண்டு ஆன பின்பும் அரசு தரப்பில் இருந்து எந்தவித அறிவிப்பும் இல்லாததால், புதிய மாவட்டம் அமைக்க கோரும் போராட்டம் மீண்டும் தீவிரமடைய தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு லட்சம் அஞ்சல் அட்டைகளில் கடிதம் எழுதி அனுப்பும் போராட்டம் கடந்த ஒன்றாம் தேதி கும்பகோணம் தலைமை அஞ்சலகத்தில் தொடங்கியது. இது ஜுலை இறுதிவரை குறிப்பிட்ட கால இடைவெளியில் விதவிதமான தொடர் போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டது.
இதற்கிடையில், போராட்டத்தின் ஒருபகுதியாக நேற்று அஞ்சலகத்தில் கோரிக்கையினை வலியுறுத்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு லட்சம் அஞ்சல் அட்டைகள் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
இதில் பாமக முன்னாள் மாநில துணை தலைவர் ஸ்டாலின் தலைமையில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம், திருவிடைமருதூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோவி செழியன் உட்பட சர்வ கட்சியினர், வணிகர்கள், வழக்கறிஞர்கள், சமூக தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று அஞ்சல் அட்டைகளை அனுப்பி வைத்தனர்
இதையும் படிங்க: போக்குவரத்துத் துறையை காயலாங்கடையாக மாற்றியவர் நேரு - அமைச்சர் செல்லூர் ராஜூ