தஞ்சாவூர்: அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த நாளத்தில் ஆபத்தான அறுவை சிகிச்சை செய்து செயற்கை ரத்தக்குழாய் பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியைச் சேர்ந்த 36 வயதான பெண்ணுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன்பிறகு இவருக்கு வலிப்பு, தலைச்சுற்றல், செவியில் இரைச்சல், பார்வை குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, டக்கயாசு தமனி அழற்சி என்கிற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதாவது, இதயத்தில் இருந்து மூளைக்கு ரத்தத்தை அனுப்பக்கூடிய பெரும் தமனி என்கிற மிக முக்கியமான ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருந்தது.
இதற்குச் சிகிச்சை அளிக்க ரூ.5 லட்சம் வரை செலவாகும் எனவும், இல்லையெனில் கேரளாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்குத் தான் செல்ல வேண்டும் எனவும் டாக்டர்கள் தெரிவித்தனர். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த அந்த பெண்ணுக்கு போதிய பண வசதி இல்லாத காரணத்தினால் இந்த நோய் மேலும் மோசமடையாமல் இருப்பதற்காக மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு வந்தார். இந்தநிலையில் கடந்த 2 மாதங்களாக அதிகப்படியான தலைச்சுற்றல் இருந்ததால் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மூளை நரம்பியல் மருத்துவத் துறையின் மூலமாக ரத்தநாள அறுவைத்துறையில் உள்ள டாக்டர்கள் அந்த பெண்ணுக்கு மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைந்ததை அறுவை சிகிச்சை மூலம் முன்னேற்ற முடியும் என்பதைக் கண்டறிந்தனர். இதையடுத்து அந்த பெண்ணுக்கு ஆபத்தான அறுவை சிகிச்சையை மேற்கொண்ட டாக்டர்கள் செயற்கை ரத்தக்குழாயைப் பொருத்தினர். இந்நிலையில் அறுவை சிகிச்சைக்குப் பின் அந்த பெண் தற்போது நலமுடன் உள்ளார்.
இது குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜி நாதன் கூறும்போது, “ஜப்பானில் தான் இந்த நோய் முதன்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அந்நாட்டில் 40 லட்சம் பேரில் ஒருவரும், ஆசிய கண்டத்தில் 10 லட்சம் பேரில் 2 முதல் 3 பேரும் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த அரிய வகை நோயால் கை உள்ளிட்ட உறுப்புகள் செயல்படாத நிலை ஏற்படும். இதற்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் மட்டுமே மிக அரிதாகச் சிகிச்சை செய்யப்படுகிறது. அந்த பெண்ணுக்கு பிற துறைகளின் உதவியுடன் இதயத்தில் இருந்து மூளைக்குச் செல்லும் பெரும் தமனிக்குப் பதிலாகச் செயற்கை ரத்தக் குழாய் பொருத்தப்பட்டது. அதாவது ஏறும் பெருநாடியில் இருந்து உறக்க நாடி வரை மாற்று வழி இணைப்பு அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டது.
இந்த சிகிச்சை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதன் முதலாகச் செய்யப்பட்டுள்ளது”, என்று கூறினார். மேலும் அந்த பெண்ணுக்கு மிக ஆபத்தான சிகிச்சை மேற்கொண்ட ரத்த நாள அறுவை சிகிச்சை துறைத் தலைவர் மருது துரை உள்ளிட்ட மருத்துவக் குழுவினருக்குப் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. அப்போது மருத்துவக் கண்காணிப்பாளர் ராமசாமி, நிலைய மருத்துவ அலுவலர் செல்வம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.