தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்த பிள்ளையார்ப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர்கள் அலெக்ஸ், அதிர்ஷ்டலட்சுமி தம்பதி. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த அக்டோபர் 16ஆம் தேதி, இவர்கள் குடும்பத்துடன் அமர்ந்து தங்களது வீட்டில் இரவு உணவு அருந்தி கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது அவர்களது இரண்டாவது 10 மாத ஆண் குழந்தை தரனேஷ், தான் கையில் வைத்து விளையாடிக் கொண்டு இருந்த இரண்டு ரூபாய் அமிர்தாஞ்சன் தைலம் பிளாஸ்டிக் டப்பாவின் மூடியை விழுங்கி விட்டு மூச்சுவிட முடியாமல் அழுதுள்ளார்.
அதனைக் கண்டு உடனடியாக பெற்றோர், குழந்தையை தஞ்சை அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை குழந்தைகள் நல அவசர சிகிச்சை பிரிவுக்கு தூக்கி வந்துள்ளனர். இதனையடுத்து, மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்த மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில், குழந்தையின் உணவுக் குழாயின் மேல் பகுதியில் மூடி சிக்கி இருப்பதை கண்டறிந்து உள்ளனர்.
இதையும் படிங்க: ஆயுதபூஜை எதிரொலி; மதுரையில் கிடுகிடுவென உயர்ந்த மல்லிகை விலை!
இதனால் உடனடியாக காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர்கள் உதவியுடன், அறுவை சிகிச்சை இல்லாமல் மூடியை உணவுக் குழாயில் இருந்து அகற்றி, குழந்தையின் உயிரை காப்பாற்றி சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் கூறும்போது, 3 செ.மீ உள்ள பிளாஸ்டிக் டப்பா மூடியை விழுங்கிய குழந்தையை மருத்துவக் குழுவினர் துரிதமாக செயல்பட்டு, அறுவை சிகிச்சை செய்யாமல் மூடியை அகற்றிய டாக்டர்கள் தர்மராஜ், உள்ளிட்ட மருத்துவக் குழுவினரை பாராட்டுவதாக தெரிவித்தார்.
மேலும், “குழந்தைகள் கையில் ஆபத்தை விளைவிக்கும் பொருட்களை தரக் கூடாது. பெற்றோர்கள் தங்கள் கண்காணிப்பில் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்” என்றும் கூறினார். கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை 18 குழந்தைகளுக்கு குழந்தைகள் நல பிரிவிலும் மற்றும் காது, மூக்கு, தொண்டை மருத்துவப் பிரிவில் 68 (கடந்த இரண்டு மாதங்களில் மட்டும்) நபர்களுக்கு நாணயங்கள், பட்டாணி, பொத்தான்கள், வேர்க்கடலை உள்ளிட்ட பொருட்கள் குரல்வளை, நாசி ஆகிய பகுதிகளில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் 6 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளின் பெற்றோர், தங்களின் தீவிர கண்காணிப்பில் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்த்திட வேண்டும். எளிதில் விழுங்கக் கூடிய பொருட்களை குழந்தைகள் கையில் கிடைக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், தங்கள் குழந்தையைக் காப்பாற்றி கொடுத்த மருத்துவர்களுக்கு குழந்தையின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிங்க: உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்த தமிழக வீரர்கள் யார் யார்?