தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் ஒரத்தநாடு அரசு பொது மருத்துவமனை, முத்தம்மாள் சத்திரம் பகுதி, வட்டாசியர் அலுவலகம் ஆகிய இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஒரத்தநாடு முத்தம்மாள் சத்திரம் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் சத்திரத்திற்குட்பட்ட பகுதிகள் மொத்த இடங்களில் செயல்படும் வணிக நிறுவனங்கள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு சத்திரத்துக்கு உட்பட்ட பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க அறிவுறுத்தினார்.
பின்னர் ஒரத்தநாடு அரசு பொது மருத்துவமனையை பார்வையிட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நபர்களிடம் மருத்துவமனையின் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் கரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளை ஆய்வுசெய்த ஆட்சியர், கரோனா நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மருத்துவர், பணியாளர்களிடம் அறிவுறுத்தினார்.
இதனைத்தொடர்ந்து ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் பொது இ-சேவை மையத்தை பார்வையிட்டு இ-சேவை மையத்துக்கு வருகைபுரிந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் பி பிரிவு அலுவலகத்திற்கு சென்ற ஆட்சியர் அவர்கள் பணியில் இருந்த அலுவலர்களிடம் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் குறை தீர்க்கும் கூட்ட மனுக்கள் தொடர்பாக ஆய்வு செய்து உடனுக்குடன் நடவடிக்கை மேற்க்கொள்ளுமாறு உத்தரவிட்டார். எக்காரணத்தைக் கொண்டும் மனுக்கள் தாமதப்படுத்தாமல் செய்து கொடுக்குமாறு அறிவுறுத்தினார்.