தஞ்சை-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் காடவராயன்பட்டி என்ற இடத்தின் அருகே சாலையின் ஓரமாக தேவதாசன் என்பவர் நடந்து சென்றுள்ளார். அப்போது தஞ்சையிலிருந்து புதுக்கோட்டை நோக்கிச் சென்ற கார் ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் காரின் முன்பக்க கண்ணாடி உடைந்த நிலையில் விபத்துக்குள்ளானவர் கீழே விழுந்து விட்டதாக நினைத்து காரை ஓட்டி வந்த நபர் வேகமாக காரை எடுத்துக்கொண்டு புதுக்கோட்டை நோக்கிச் சென்றுள்ளார்.
அங்கிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பழைய கந்தர்வகோட்டை சுங்கச்சாவடி பகுதியை அந்தக் கார் கடக்கும்போது காரில் இருந்து உயிரிழந்த நிலையில் தேவதாசன் உடல் பலத்த காயங்களுடன் சாலையில் விழுந்துள்ளது.
அப்போதுதான் தனது காரின் முன்புற பகுதியில் விபத்துக்குள்ளான நபர் சிக்கியிருந்தது காரின் ஓட்டுனருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காருடன் அங்கிருந்து அந்த நபர் தப்பிச் சென்றுள்ளார்.
இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சுங்கச்சாவடி அருகே தேவதாசன் சடலமாக நஞ்சு போய் கிடந்ததைக் கண்டு ஆத்திரமடைந்து சுங்கசாவடியை முற்றுகையிட்டனர்.
இதையறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கந்தர்வகோட்டை காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு இறந்துபோன தேவதாசின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், கந்தர்வகோட்டை சுங்கச்சாவடியில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்த காரின் நம்பரை வைத்து காரின் உரிமையாளரைத் தொடர்புகொண்ட காவல்துறையினர் அவரை அழைத்து வந்து, காரைப் பறிமுதல் செய்து இச்சம்பவம் குறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.