தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயிலை எழுப்பிய மாமன்னன் இராஜராஜ சோழனின் 1038ஆம் ஆண்டு சதயவிழா வரும் 24ஆம் தேதி மற்றும் 25ஆம் தேதி சிறப்பாக நடைபெற உள்ளது. இதனையடுத்து தஞ்சை பெரிய கோயில் முழுவதும் மின் விளக்கு தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் தங்கம் போல் ஜொலிக்கின்றன.
மேலும் தஞ்சாவூரின் முக்கிய இடங்களில் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனால் தஞ்சை மாநகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது. தமிழர்களின் கட்டிட கலைக்கும் சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து வரும் உலக பாரம்பரிய சின்னமான தஞ்சை பெரிய கோயிலை மாமன்னன் இராஜராஜ சோழன் எழுப்பினார்.
ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்த இராஜராஜ சோழன் முடிசூடிய நாள் ஆண்டுதோறும் சதயவிழாவாக அரசு சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு 1038ஆம் ஆண்டு சதயவிழா வருகிற 24ஆம் தேதி தொடங்குகிறது. சதயவிழாவை முன்னிட்டு, பெரிய கோயில் விமானம், மராட்டா நுழைவு வாயில், கேரளாந்தகன் நுழைவு வாயில், ராஜராஜன் நுழைவு வாயில், கோயில் உள் பிரகாரம், வெளிபிரகாரம், கோட்டை மதில்சுவர், ஆகியவை மின்னொளியில் தங்கம் போல் ஜொலிக்கின்றன.
இதையும் படிங்க: Today Tamil Rasipalan : எதிர்பாராததை எதிர்நோக்குங்கள்.. அதிலுள்ள சுகம் தனி!
மேலும் ராஜராஜ சோழன் சிலை, அரசு மருத்துவமனை சாலை, பெரிய கோயில் சாலை, பேரறிஞர் அண்ணா சிலை, தந்தை பெரியார் சிலை என அனைத்து இடங்களும் மின் விளக்குகளாலும், மின் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பொதுமக்கள் கோயில் முன்பும், ராஜராஜ சோழன் சிலை முன்பும் நின்று புகைப்படமும், செல்ஃபியும் எடுத்துக்கொண்டு செல்கின்றனர். மேலும் தொடர் விடுமுறையால் பெரிய கோயில் கூட்டமாக காணப்படுகிறது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் திருமுறை அரங்கம், மேடை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், குரல் இசை, திருமுறை பண்ணிசை, நாத சங்கமம், திருமுறை இசை, சிறப்பு பரதநாட்டியம், கவியரங்கம், சிவதாண்டவம், இசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெறவுள்ளது.
மேலும் மாமன்னன் இராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல், திருமுறை திருவீதி உலா, பெருவுடையார் பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம், பெருந்தீப வழிபாடு, நடன நிகழ்ச்சி, தேவார இன்னிசை, நாட்டியாஞ்சலி, நாத சங்கமம், மாமன்னன் இராசராசன் விருது வழங்குதல், சிறப்பு பட்டிமன்றம், சுவாமி திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இதையும் படிங்க: தஞ்சை பெரிய கோயில் நவராத்திரி விழா: பெரியநாயகி அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம்!