தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதி கரிக்காடு. இப்பகுதியில் 27ஆவது வார்டில் பாரதி சாலை கணபதி நகரிலிருந்து எஸ்எம்எஸ் ஆர்ச் வரை செல்லும் சாலை கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் சீரமைப்பதற்காக உடைத்து போடப்பட்டது.
இந்நிலையில் இதுவரை அந்த சாலையை நகராட்சி நிர்வாகம் சீரமைக்கவில்லை. இதனால் தற்போது சாலை பள்ளம், மேடுகளாக காட்சியளிக்கிறது. மேலும் இப்பகுதியில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
தற்போது இப்பகுதியில் மழை அதிகமாக பெய்வதால் பொதுமக்கள் நடந்துகூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலையில் உள்ள குப்பைகளை கூட அகற்றாமல் அப்படியே வைத்துள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. இப்படி பல்வேறு வகையில் இந்தப் பகுதி புறக்கணிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர் இடத்தில் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.
இதையும் படிங்க: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராகப் போராட்டம் - ரயில்கள் ரத்து, இணைய சேவை முடக்கம்