தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள சித்தாதிக்காடு கிராமத்தில் உள்ள தரைப்பாலம் மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்து வருகிறது. இதனால் மழை காலங்களில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, சாலை போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. காரணம், இந்தப் பாலத்தின் அருகில் உள்ள ரயில்வே பாலம் 40 அடி உயரத்திற்கு மேல் இருப்பதால் இந்த தரைப்பாலம் மிகவும் தாழ்ந்து படுமோசமான பள்ளத்தில் இருக்கிறது. மேலும், தொடர் மழை காலங்களில் 40 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வரும் மழை நீர், சித்தாதிக்காடு பாலத்திற்கு மேல் ஆறு அடி உயரத்திற்கு தண்ணீர் செல்லும் நிலை ஏற்படுகிறது.
இதனால், பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, பட்டுக்கோட்டை ஆகிய வழித்தடங்களில் செல்லக்கூடிய போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. அதோடு இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோரும் இந்த பாலத்தை கடந்து செல்ல கிட்டத்தட்ட ஏழு கிலோமீட்டர் தூரம் சுற்றி வர வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது. எனவே, சித்தாதிக்காடு கிராமத்தில் இருக்கும் தரைப்பாலத்தை உயரமாகக் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.