தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன்(34). விவசாயக் கூலியான இவருக்கும், பிரியதர்ஷினி (20) என்ற பெண்ணுக்கும் திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. இந்நிலையில் கருவுற்று இருந்த ப்ரியதர்ஷினிக்கு கடந்த மே 25ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தைக்கு குளுக்கோஸ்
குறை மாதத்தில் குழந்தை பிறந்தால், அதற்கு வயிற்றில் கோளாறு இருப்பதாகவும், எனவே தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்ததால், குழந்தைக்கு கையில் ஊசி மூலம் குளுக்கோஸ் ஏற்றியுள்ளனர். இந்நிலையில் குழந்தை ஆரோக்கியத்துடன் இருப்பதால், மருத்துவ நிர்வாகம் குழந்தையை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
அலட்சியத்தின் விளைவு
இதனையடுத்து குழந்தையின் கையில் இருந்த ஊசியை அகற்றுவதற்கு செவிலியிடம் கணேசன் கடந்த ஜூன் 8ஆம் தேதி சென்றுள்ளார். அப்போது கையில் இருந்த பேண்டை கைகள் மூலம் அகற்றாமல், கத்திரிக்கோலை வைத்து அகற்றியதால் குழந்தையின் கட்டை விரல் கடந்த துண்டானது. இதனால், குழந்தையின் துண்டான இடத்தில் தற்போது ஊசியை வைத்து மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர்.
எப்போது நடவடிக்கை?
இதுவரை மருத்துவர்கள் உரிய விளக்கம் அளிக்காததால், செவிலி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதுபோன்ற தவறுகள் இனிமேல் நடக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குழந்தையின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட செவிலி மீது காவல் நிலையத்திலும், துறை ரீதியாகவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: பிறந்த குழந்தையின் கட்டை விரல் துண்டிப்பு: செவிலியர்கள் அலட்சியம்!