தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த மேலத்திருப்பந்துருத்தி கோனகடுங்கால் ஆற்றிலும், குடமுருட்டி ஆற்றிலும் தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், “டெல்டா மாவட்டத்திற்கு ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைந்தோம். ஆனால், ஆற்றினைச் சரிவர தூர்வாராததால் ஆற்றில் போதுமான தண்ணீர் வராததால் குறுவை நாற்றுகளை கால்நடைகளைவிட்டு மேய்த்தோம்.
மேலும், நாற்றை வந்த விலைக்கு விற்கும் சூழல் ஏற்பட்டது. கோனகடுங்கால் ஆற்றிலும், குடமுருட்டி ஆற்றிலும் முழுமையாகவே தண்ணீர் வரவில்லை. இதனால் விவசாயிகளுக்குத் தொடர் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் எங்களுடைய உண்மைநிலையை அறிந்து எங்கள் பகுதிக்குத் தேவையான தண்ணீரை திறந்தால் சம்பா தாளடி பயிரைச் சிறப்பாகச் செய்ய முடியும். ஆகவே, உடனே கோனகடுங்கால் ஆற்றில் தண்ணீரை முழுமையாகத் திறந்துவிட வேண்டும்.
மேலும், விவசாய நிலமானது மேய்ச்சல் நிலமாக மாறிவருவதற்கு அரசுதான் காரணம். அதற்கு இழப்பீடாக ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 40 ஆயிரம் ரூபாயை விவசாயிகளுக்கு அரசு வழங்கிட வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: சாஸ்தாகோயில் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து விடக் கோரி ஆர்ப்பாட்டம்!