தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த கீழே தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன் (70). இவரது கரும்பு வயலில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்துவந்ததால் அதைத் தடுப்பதற்காக, கடந்த 5ஆம் தேதி வயலைச் சுற்றி மின்வேலி அமைத்தார். அவ்வழியாக வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த கணேசன் (48), என்ற விவசாயி மின்வேலி மீது கால் வைத்ததால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
இதனைப் பார்த்த வயலின் உரிமையாளர் தியாகராஜன் அதிர்ச்சியடைந்து அப்பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (45), ராஜகோபால் (66) ஆகியோருடன் இணைந்து இறந்த கணேசனின் உடலை வயலில் குழிதோண்டி புதைத்துவிட்டனர்.
இந்நிலையில் வயலுக்குச் சென்ற கணேசனைக் காணவில்லை என அவரது மகன் விக்னேஷ் (18), கபிஸ்தலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், கணேசனை குழிதோண்டி புதைத்ததை அவர்கள் ஒத்துக்கொண்டதை அடுத்து மூவரும் கைதுசெய்யப்பட்டனர்.
மேலும் பாபநாசம் வட்டாட்சியர் கண்ணன் தலைமையில், திருவையாறு மாவட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் இளங்கோ, தடயவியல் வல்லுநர்கள் உதவியுடன், மருத்துவர்கள் கணேசனின் உடலைத் தோண்டி எடுத்து அதே இடத்திலேயே உடற்கூறு ஆய்வு செய்து உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.