தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் - சங்கவை தம்பதியின் மகன் சங்கரநாராயணன் (35). இன்ஜினியரிங் (Engineering) முடித்த இவர் அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அதேபோல், அமெரிக்க நாட்டின் மாசச்சூசெட்ஸ் பகுதியைச் சேர்ந்த ஜான் டிக்சன் - மேரி டிக்சன் தம்பதியின் மகள் அன்னி டிக்சன் (35). எம்.ஏ சைக்காலஜி படித்த இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்து காதலித்து வந்துள்ளனர். இந்த காதலை தொடர்ந்து, இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து தங்களது குடும்பத்தினரிடமும் தெரிவித்துள்ளனர். இருவரின் காதலுக்கும் பெற்றோர்கள் பச்சைக்கொடி காட்டவே, திருமணத்தை தமிழர் பாரம்பரிய முறைப்படி செய்ய முடிவெடுத்து, தஞ்சாவூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சங்கரநாராயணனுக்கும், அன்னி டிக்சனுக்கும் இன்று (நவ.19) திருமணம் சிறப்பாக நடைபெற்றது.
இதில், தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி மணமகன் காட்டன் வேட்டி - சட்டையும், மணப்பெண் சிவப்பு நிற புடவையும் அணிந்திருந்தனர். பின்னர், மங்கள வாத்தியங்கள் முழங்க, தேவார திருமுறை பாடி, வேத மந்திரங்கள் ஓதி, யாகம் வளர்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மணமகன் திருக்குறள் உறுதிமொழி எடுத்தார்.
பின்னர், உறவினர்கள் அட்சதை தூவி வாழ்த்த மணப்பெண்ணுக்கு சங்கரநாராயணன் தாலி அணிவித்தார். மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளை மெட்டி அணிவித்த பின்னர், இருவரும் உறவினர்களிடம் ஆசிர்வாதம் வாங்கினர். தொடர்ந்து மணமகன், மணப்பெண்ணுக்குமான திருமண சடங்குகள் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் வெளிநாட்டில் இருந்து வந்திருந்த மணமகள் உறவினர்களும் வேட்டி, சேலை அணிந்து வந்திருந்தனர். மேலும், திருமணத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினர். இவ்வாறு வெளிநாட்டு மணப்பெண்ணை தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்த மணமகனுக்கும் வாழ்த்துக்கள் குவிந்தன.
காதலுக்கு சாதி, மதம், இனம், மொழி ஆகியவை தேவையற்றது என்பதை உணர்த்தும் விதமாக நடைபெற்ற இந்த திருமணம் உறவினர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பெற்றோர்கள் எதிர்ப்பில் திருமணம் செய்து கொள்வதை விட, இரு வீட்டார் சம்மதத்துடன் கடல் கடந்து காதலை வெற்றி பெறச் செய்துள்ளனர், இந்த ஜோடி.
இதுகுறித்து மணமகன் சங்கரநாராயணன் கூறுகையில், “அன்னி டிக்சனை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்து காதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்தியாவில் திருமணம் செய்ய முடிவெடுத்தோம். அந்த வகையில், இன்று தமிழ் முறைப்படி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
அவர்களது உறவினர்களும் இங்கு வந்து வாழ்த்தி உள்ளனர். தமிழ் கலாச்சார முறைப்படி உடை அணிந்துள்ளனர். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இரண்டு பேருமே விலங்குகளிடம் இருந்து வந்த எந்த பொருட்களையும் பயன்படுத்துவது இல்லை.
உணவு வகைகளையும் அதேபோல் தான் செய்துள்ளோம். நான் பயன்படுத்திய உடை கூட பட்டு இல்லை. பட்டு பூச்சியிலிருந்து அவை வருவதால் பட்டு வேட்டி அணியவில்லை” என்று கூறினார். மேலும், திருமண மண்டபத்தில் கருணை, ஆரோக்கியம், சுற்றுசூழலுக்காக சைவத்துக்கு மாறுவோம் என்ற விளம்பர பிளக்ஸ் போர்டும் வைத்திருந்தனர்.
இதையும் படிங்க: விவேக் பிறந்தநாள்; விவேக் உருவத்தை அப்துல் கலாம் படத்தைப் பயன்படுத்தி வரைந்த ஓவியர்!