தஞ்சாவூர்: அழகன் என்றும் தமிழ் கடவுள் என்றும் போற்றப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக அமையப் பெற்றது கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலாகும். பிரபவம் முதல் அட்சயம் வரையிலான அறுபது தமிழ் வருட தேவதைகள் அறுபது படிக்கட்டுகளாக இருந்து இத்தலத்திற்கு வருகை தரும் முருக பக்தர்களுக்கு சேவை செய்வதாக ஐதீகம்.
இத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறந்தது. நக்கீரரால் திருமுருகாற்றுப்படையிலும், அருணகிரிநாதரால் திருபுகழிலும் பாடல் பெற்றது என பெருமை கொண்டதாகும். இத்தகைய சிறப்பு பெற்ற சுவாமி மலையில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர பெருவிழாவின் ஒரு பகுதியாக, வள்ளி திருமணம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் இவ்விழாவினை முன்னிட்டு, நேற்றிரவு, குன்ற குறமகள் வள்ளி திருமணத்திற்காக, குறவர் இன மக்கள் ஏராளமானோர் திரண்டனர்.
சுவாமிமலை காவிரியாற்று கரையில் உள்ள விநாயகர் கோயிலில் இருந்து, சுவாமிநாத சுவாமி திருக்கோயிலுக்கு, பல வகையான வாழைப்பழங்கள், மாம்பழம், பலாப்பலம், ஆப்பிள், ஆரஞ்சு, தர்பூசணி, கிர்ணி, கொய்யா, மாதுளை, உள்ளிட்ட 30 வகையான பழங்கள், பட்டு வேட்டி, துண்டு, பட்டுச்சேலை உள்ளிட்ட வஸ்திரங்கள், சுவாமிகளுக்கு மலர் மாலைகள் மற்றும் உதிரி பூக்கள், ஆகியவற்றை மேள தாளம் முழங்க, குறவர் இன பூர்வீக விளையாட்டான சிலம்பம், வேல் கம்பு சுற்றுதல், சுருள் வாள் விளையாட்டு ஆகிய வீர விளையாட்டுகளுடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து சுவாமிகளுக்கு சீர் அளித்து மகிழ்ந்தனர்.
வள்ளி தெய்வானையுடன் காட்சியளித்த சண்முக சுவாமியையும், வேடமூர்த்தி கோலத்தில் முருகப் பெருமான் வள்ளியுடன் காட்சியளிப்பதையும் கண்ணாரக் கண்டும், மனமுருக வேண்டியும், அவர்களுக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்து வழிபட்டு, மகா தீபாராதனையினை கண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து மலை மேல் அருள்பாலிக்கும், மூலவர் தகப்பன் சுவாமியான சுவாமிநாத சுவாமியும் வழிபட்டு மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க: தஞ்சாவூரில் நெகிழி மாற்றுபொருள் கண்காட்சியில் 75 வயது பாட்டிக்கு அடித்த ஜாக்பாட்!