தஞ்சாவூர்: தெய்வத் தமிழ் பேரவை சார்பாக நேற்று (ஜூலை 3) காலை தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகே, பேரவையின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் ஈஷா மையத்தை அரசுடைமையாக்க வேண்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், 'தமிழ்நாட்டில் உள்ள கோவில் கருவறைகள், யாகம், குடமுழுக்கு அனைத்து இடங்களிலும் தமிழில் பூஜை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்துமதத்திற்கு எதிரான ஈஷா
இந்து சமய அறநிலையத் துறையை கலைத்திட வேண்டும் என போராட்டம் நடத்திய ஈஷா யோகா மையம், சிவ நெறிகளுக்கு எதிராக இந்து மதத்திற்கு எதிராக செயல்படுகிறது. எனவே ஈஷா யோகா மையத்தை அரசுடைமையாக்கி இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வர வேண்டும்.
அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள்
பெண்கள் உள்பட அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும். அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளை விரைவில் தொடங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
பெ.மணியரசன் vs அர்ஜூன் சம்பத்
இதனையடுத்து, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போட்டியாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் போராட்டம் நடைபெற்றது.
ஈஷாவை திறந்தது கருணாநிதி
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், "ஈஷா மையம் என்பது மக்கள் சொத்தாகதான் உள்ளது. ஈஷா மையம் மூலமாக ஏராளமான மரங்கள் நடப்பட்டுள்ளன, அதனை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிதான் தொடங்கி வைத்தார். மேலும், ஏராளமான மக்கள் பணிகளை செய்து வருகின்றனர். தமிழ் அர்ச்சனை என்பது பண்டைய காலம் முதல் நடைபெற்று வருகிறது. இவர்கள் எதுவும் புதிதாக செய்ய வேண்டாம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெருமாள்தான் வேணுமா; முருகன் வேணாமா - சேகர் பாபு குறித்து பணியாளர்கள் ஆதங்கம்!