தஞ்சாவூர்: பாபநாசம் அருகே உள்ள திருமண்டகுடியில் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை செயல்பட்டு வந்தது. இந்த சர்க்கரை ஆலை நிர்வாகம், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகை சுமார் 128 கோடியை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, 2018ஆம் ஆண்டு இந்த ஆலை நிர்வாகம் ஆலையை நிரந்தரமாக மூடியது. மேலும் ஆலை நிர்வாகம், விவசாயிகளின் பெயரில் மோசடியாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் சுமார் 300 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது. ஆலை நிர்வாகம் மூடப்பட்டதால், அந்த கடனை திரும்ப தரக்கோரி வங்கி நிர்வாகம் விவசாயிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனால் விவசாயிகளுக்கு சிபில் பிரச்னையும் எழுந்ததால், அவர்களால் வேறு எந்த கடனும் வாங்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மூடப்பட்ட திரு ஆரூரான் சர்க்கரை ஆலையை கால்ஸ் என்ற தனியார் நிறுவனம் வாங்கி, தற்போது ஆலையைத் திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சர்க்கரை ஆலை முன்பு கடந்த 353 நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் முன்னிலையில் நேற்று (நவ.17) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. அதில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மற்றும் கரும்பு விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் அந்த கூட்டத்தில், விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
பின்னர் பேசிய அமைச்சர், ஆலையின் புதிய நிர்வாகம் முதல் தவணையாக நிலுவைத் தொகையில் 75 சதவீதம் அளிக்கும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை ஏற்றுக் கொள்ளாத கரும்பு விவசாயிகள் முழுத் தொகையும் கொடுக்கப்பட வேண்டும் எனவும், சிபில் ஸ்கோரை சரி செய்ய வேண்டும் என்றும், அதுவரை போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளனர்.
இது குறித்து காவிரிப் பாசன விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் விமலநாதன் கூறுகையில், “10 நாட்களுக்குள் 75 சதவீதம் நிலுவைத் தொகை வழங்க அமைச்சர் தனியார் நிறுவனத்திற்கு அறிவுரை வழங்கினார். ஆனால், அதில் விவசாயிகளுக்கு உடன்பாடு இல்லை. முழுமையான தொகையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். மேலும், பல கோடி மோசடி செய்த ஆலை நிர்வாகம், அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை" என குற்றம் சாட்டினார்.
மேலும், இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கோவி.செழியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம், இராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரசேகரன், நீலமேகம், ஜவாஹிருல்லா, மாலி உள்ளிட்ட விவசாயிகளும், தனியார் கரும்பு ஆலை பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.