தஞ்சாவூர்: கார்த்திகை மாதத்தில், திருக்கார்த்திகை வரும் டிசம்பர் 6ஆம் தேதி அன்று தீபத் திருவிழாவாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தஞ்சையை அடுத்த கரம்பை பகுதியில், மண்ணால் ஆன அகல் விளக்கு செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தஞ்சையில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், அகல் விளக்கு தயாரிப்புப் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அகல்விளக்கு செய்வதற்கு களிமண் கிடைப்பது சிரமமான ஒன்றாக உள்ளது. அதையும் தாண்டி மண் கிடைத்தால், மழையால் அகல் விளக்கு காயாமல் ஈரப்பதமாக உள்ளது.
போதாக்குறைக்கு இன்றைய காலத்தில் மக்கள் அலுமினிய விளக்குகள், மெழுகு விளக்குகள், பிளாஸ்டிக் விளக்குகள் போன்றவற்றை பயன்படுத்துவதால் அகல் விளக்கு பயன்படுத்துவது அரிதாகிவிட்டது. இதனால் இத்தொழில் அழிந்துவரும் நிலையில் உள்ளது.
இதுகுறித்து அகல் விளக்கு தயாரிக்கும் குமார் கூறியதாவது, 'நாங்கள் பரம்பரை பரம்பரையாக பாரம்பரியமாக மண் விளக்கு தயாரிக்கும் தொழிலை செய்து வருகிறோம். முன்புபோல், தற்போது விளக்குகள் விற்பனையாவது இல்லை. தற்போதைய தலைமுறையினர் அலுமினிய விளக்குகள், மெழுகு விளக்குகள், பிளாஸ்டிக் விளக்குகள் போன்றவற்றை விரும்புகின்றனர்.
இன்றும் பாரம்பரியம் மாறாத மக்கள் மட்டுமே மண் விளக்கு பயன்படுத்துகின்றனர். இதனால் மண் விளக்கு விற்பனை மிகக்குறைவாக உள்ளது. இதனால் சிரமத்திற்குத் தள்ளப்பட்டுள்ளோம். விளக்கு செய்வதற்கு களிமண் கிடைப்பதும் அரிதாகிவிட்டது.
விளக்கை செய்துவிட்டு, அதனை சுட்டு பக்குவப்படுத்துவதற்கு வைக்கோல் போன்ற பொருள்கள் தேவைப்படும். அதற்கு அதிகம் செலவு ஆகிறது. பல தடைகளைக் கடந்து அதனை காயவைக்கும் போது மழை வந்துவிடுகிறது. இதனால் விளக்குகள் காயாமல் ஈரப்பதமாக இருக்கிறது.
இதனால், தொழிலாளர்களுக்கு எந்த ஒரு முன்னேற்றமும் கிடைப்பதில்லை. விளக்கு விற்பனையாகாமல் இருப்பது மிக சிரமமாக இருக்கிறது. இதற்கு அரசாங்கம் முன் வந்து உதவிக்கரம் நீட்டினால் நன்றாக இருக்கும். தமிழ்நாடு அரசு ஏதேனும் நிதி உதவி அளித்து உதவ வேண்டும்' என்று தெரிவித்தார்.
பாரம்பரியமாக இத்தொழிலை செய்து வரும் தொழிலாளர்கள், இதனால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழ்நாடு அரசு இவர்களது வேதனைக்கு செவி சாய்த்து நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: "பிரியா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்" - மருத்துவர்கள் சங்கம்