தஞ்சாவூர் மாவட்டம் திங்களூரில் கைலாசநாதன் திருக்கோயில் உள்ளது. நவக்கிரக ஸ்தலங்களில் சந்திரனுக்கு உரிய பரிகார ஸ்தலமாக விளங்கும் இக்கோயிலில், அவருக்கு தனி சன்னதி உள்ளது. இந்நிலையில், 2008ஆம் ஆண்டு சந்திரயான்-1 விண்வெளியில் ஏவப்பட்டபோது, அதன் பயணம் வெற்றிகரமாக நடைபெற இக்கோவிலில் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது.
சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஜூலை 22ஆம் தேதி வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ள இருப்பதால், உலகமே இதனை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது.
சந்திரயான்-2 வெற்றிகரமாக நிலவில் இறங்குவதற்காகவும், ஆய்வுகள் மேற்கொள்ளும்போது தடைகள் எதுவும் ஏற்பாடமல் இருப்பதற்காகவும் மாலை திங்களுர் சந்திரன் கோயிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சந்திரனுக்கு மஞ்சள், பால் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டன. இதில் பொதுமக்கள், பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.