தஞ்சாவூர்: ஜனசதாப்தி விரைவு ரயிலில் மின்கசிவு ஏற்பட்டதால், வண்டி 20 நிமிடம் தாமதமாகச் சென்றது.
செவ்வாய்க்கிழமை தவிர வாரம்தோறும் மயிலாடுதுறையிலிருந்து கோவை வரை செல்லும் ஜன சதாப்தி விரைவு ரயில், வழக்கம்போல இன்று (அக்டோபர் 24) நண்பகல் 2 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டது. பகல் 3:30 மணிக்கு தஞ்சாவூர் நிறுத்தத்தில் பயணிகளுக்காக நிறுத்தப்பட்டது. மீண்டும் புறப்பட்ட வண்டி, பூதலூர், ஆலக்குடி பகுதிகளை கடக்கும் பொழுது, டி1 பெட்டியில் மின் கசிவால் புகை ஏற்பட்டது.
இந்த கரும்புகையைக் கண்ட பயணிகள் திடீரென அலறத் தொடங்கினர். அச்சத்திலிருந்த பயணிகள் வண்டியை அவசரத்திற்கு நிறுத்தும் சங்கிலியைப் பிடித்து இழுத்தனர். உடனடியாக வண்டி நிறுத்தப்பட்டு, மின்கசிவு ஏற்பட்ட பெட்டிக்கு ஓட்டுநர் வந்து ஆய்வுமேற்கொண்டார்.
அப்போது பெரும் பாதிப்பு ஏதும் இல்லை என்பதை உறுதிபடுத்திக்கொண்ட ஓட்டுநர், பயணிகளை வேறு பெட்டியில் அமரவைத்து விட்டு, வண்டியை இயக்கினார். இச்சம்பவத்தால் வண்டி 20 நிமிடம் தாமதமாகச் சென்றது.