தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே சுவாமிமலையில் மாசிலாமணி(60) என்பவருக்குச் சொந்தமான ஸ்தபதி (சிற்பக்கூடம்) கலைக்கூடத்தில், சிலைக் கடத்தல் பிரிவு போலீசார் திடீரென நேற்று (ஆக.9) பழங்கால சிலைகள் ஏதும் உள்ளதா? என்று சோதனையிட்டு அங்கிருந்த 8 உலோக சிலைகளை, பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இந்நிலையில் சிற்பக் கலைஞர்கள் அப்பகுதியில் சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவினருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சிற்பக்கூடத்தில் திடீர் ரெய்டு: சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவுனருக்கு கிடைத்த ரகசியத்தகவலின்பேரில், சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு ஏடிஎஸ்பி பாலமுருகன், காவல் ஆய்வாளர் இந்திரா, சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் என 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று (ஆக.9) சுவாமிமலை, சர்வமானியத் தெருவில் உள்ள மாசிலாமணி (60) என்பவருக்குச் சொந்தமான சிற்பக்கூடத்தில் பழங்கால உலோக சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறி, திடீரென சோதனையிட்டனர்.
சோதனையில் அமர்ந்த நிலையில் இருந்த புத்தர் சிலை, நின்ற நிலையில் இருந்த புத்தர் சிலை, போக சக்தியம்மன் சிலை, சிவதாண்டவம், மீனாட்சி, விஷ்ணு, ரமணர் ஆகிய 7 சிலைகளை சிலைகளைக் கைப்பற்றி, சென்னைக்கு பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
நாங்கள் வடிமைத்த சிலைகள் : முன்னதாக, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுனரின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், இதுபோன்ற தொடர் அச்சுறுத்தலைக் கண்டித்தும், மாசிலாமணி ஸ்தபதி தொழிற்கூடத்தின் முன்பு அமர்ந்து, 'இவைகள் பழங்கால சிலை அல்ல, தற்போதைய சிலை' என வாதிட்டு, சுவாமிமலையைச்சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஸ்தபதிகள் 3 மணி நேரமாக தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிலைகளை ஆய்வு செய்ய முடிவு: மேலும், அப்பகுதியில் கும்பகோணம் டிஎஸ்பி அசோகன் தலைமையிலான உட்கோட்ட காவல் சரக காவல் ஆய்வாளர்கள் அடங்கிய போலீசார், பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்தபதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட மாசிலாமணி ஸ்தபதி ஆகியோரிடம் தொடர்ந்து கும்பகோணம் டிஎஸ்பி அசோகன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின், 10 அடி உயரம் கொண்ட நின்ற நிலையிலான சிவகாமி சிலையை தவிர்த்து ஏனைய 7 சிலைகளைப்பறிமுதல் செய்து சென்னை சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு தலைமையகத்திற்கு கொண்டு சென்றனர்.
சிற்பக்கலைஞர்களின் கோரிக்கை: இது குறித்து சிற்பக்கலைஞர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'சிலைகளின் தொன்மை குறித்து ஆய்வு செய்து சான்றளிக்க வேண்டியவர்கள் தொல்லியல்துறையினர் என்பதாலும், சுவாமிமலையில் தான் அதிக அளவில் உலோக சிலைகள் தயார் ஆவதாலும், நாங்கள் ஒவ்வொரு சிலையையும் சென்னை கொண்டு சென்று, சான்று பெறுவது என்பது இயலாது.
எனவே, தொல்லியல்துறை சார்பில் சுவாமிமலையில் இதனை ஆய்வு செய்யும் வகையில் ஒரு அலுவலகத்தை அமைத்தால், இப்பிரச்னைக்கு எளிய தீர்வு கிடைக்கும். இதற்கு முதலமைச்சர் நல்ல தீர்வு காணவேண்டும்' எனப் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்தபதிகள் கருத்துத் தெரிவித்தனர்.
குறிப்பாக, தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் உலோக சுவாமி சிலைகள் தயார் செய்வதில் உலக அளவில், புகழ்பெற்ற இடமாக விளங்குவது கும்பகோணம் அருகே உள்ள இந்த சுவாமிமலை ஆகும். இங்கு 50-க்கும் மேற்பட்ட பட்டறைகளில், நூற்றுக்கணக்காண ஸ்தபதிகள் பாரம்பரியமான முறைகளில் மிகவும் நேர்த்தியாக சுவாமிகளின் சிலைகளை அழகுற வடிவமைப்புக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'தலைவெட்டி முனியப்பன் அல்ல.., புத்தர் சிலை தான்..!' - உயர் நீதிமன்றத்தீர்ப்பால் வேகமெடுக்கும் பணிகள்