தஞ்சாவூர்: ஒரத்தநாடு அருகேவுள்ள பொன்னாப்பூரைச் சேர்ந்தவர் விவசாயி சுரேஷ்குமார். இவர் 2018ஆம் ஆண்டு கோட்டாக் மஹிந்திரா வங்கியில் 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று டிராக்டர் வாங்கியுள்ளார்.
மூன்று மாதத்திற்கு ஒரு தவணை என 52 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும். மொத்தம் 12 மாத தவணையில் 8 மாதம் கட்டியுள்ளார்.
கரோனா காரணமாக கடந்த இரண்டு தவணைகளை அவரால் கட்ட முடியவில்லை. இதனால், வங்கிக்குச் சென்று தவணை கட்டுவதற்கு கால அவகாசம் கேட்டுள்ளார்.
இந்நிலையில், ஆகஸ்ட் 12ஆம் தேதி விவசாயி சுரேஷ்குமார் வீட்டில் இல்லாதபோது அங்கு வந்த வங்கி ஊழியர்கள், எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி டிராக்டரை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.
இதனையறிந்த சுரேஷ்குமார், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை டிராக்டரை துரத்திச் சென்று மடக்கிப்பிடித்தார். பின்னர், டிராக்டர் முன்பு படுத்துக்கொண்டு டிராக்டரை எடுத்துச் செல்லாதவாறு போராட்டத்தில் ஈடுபட்டார்.
காவல் நிலையத்தில் புகார்
பின்னர், அவர் இரண்டு மாத தவணை மட்டும்தான் கட்ட வேண்டும் அதற்காக ஏன் டிராக்டர் பறிமுதல் செய்ய வேண்டும் என வங்கி அலுவலர்களிடம் கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து ஊர் மக்கள் திரண்டதால் டிராக்டரை விட்டுவிட்டு அலுவலர்கள் சென்று விட்டனர். இச்சம்பவம் தொடர்பாக ஒரத்தநாடு காவல் நிலையத்தில் சுரேஷ்குமார் புகார் அளித்தார்.
தொடர்ந்து இது குறித்து வங்கியில் சென்று கேட்டபோது கடன் வழங்குவது மட்டும் தான் எங்கள் வேலை என்றும், கடனை திருப்பி வாங்குவதற்கு திருச்சியைச் சேர்ந்த அலுவலர்கள்தான் ஈடுபடுவதாகவும் அதனால் இதற்கும் வங்கிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதே வங்கி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டிராக்டருக்குத் தவனை கட்டாத பாலன் என்ற விவசாயியை தாக்கியது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: கும்பகோணத்தில் இருந்து நெல்லைக்கு கடத்திவந்த 180 மது பாட்டில்கள் பறிமுதல்: இரண்டு பேர் கைது