அரியலூர்: அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கீழத் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் மகன் முருகானந்தம் ( 45). இவரது முதல் மனைவி கனிமொழியின் மகள் பிரியா (பெயர் மாற்றப்பட்டது).
கனிமொழி 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மகள் மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலை பள்ளியில் 8ஆம் வகுப்பு சேர்ந்து, தற்போது 12ஆம் படித்து வந்தார். அவர் அருகில் உள்ள செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் தங்கி படித்து வந்தார்.
தற்கொலை
இந்த நிலையில், கடந்த 9ஆம் தேதி, மாணவி தனக்கு வயிற்று வலி என்று கூறியதால் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். மறுதினம் 10ஆம் தேதி மாணவியின் தந்தைக்குத் தெரியப்படுத்தியதால் அவர் வந்து மாணவியை அழைத்து சென்றுவிட்டார்.
இந்நிலையில் சனிக்கிழமை 15ஆம் தேதி தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்களிடம் மாணவி, தான் பூச்சிமருந்து குடித்ததாகவும், விடுதியில் தன்னை அனைத்து வேலைகளையும் பார்க்கச் சொன்னதாகவும் தான் 12ஆம் வகுப்பு படிப்பதால் தன்னால் படிக்க முடியவில்லை என்ற காரணத்தினால் பூச்சி மருந்தை குடித்ததாகும் கூறியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த மாணவி நேற்று 19ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜன் வழக்குப்பதிவு செய்து விடுதி வார்டன் சகாயமேரியை (62) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.
இதையடுத்து சகாயமேரி, 15 நாட்கள் வரை திருச்சி மத்திய சிறையில் இருக்க வேண்டும் என நீதிபதி ஆணைப்பிறப்பித்தார். பின் அங்கு சகாயமேரி அடைக்கப்பட்டார்.
இவ்வழக்குப்பதிவினை மேற்கொண்ட திருக்காட்டுப்பள்ளி காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜன் கூறுகையில், 'மாணவி பிரியா (பெயர் மாற்றம்செய்யப்பட்டுள்ளது) உயிரிழந்துவிட்டார். பிரியாவின் உடல் பிரேதபரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்வோம்’ என்றார்.
இதற்கிடையில், மகளின் இறப்பிற்கு விடுதியில் அவரை மதமாற்றம் செய்ய முற்பட்டதே காரணம் என்றும், தன் மகளின் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாணவியின் உடலை அவரது பெற்றோர், மற்றும் உறவினர்கள் வாங்க மறுத்தனர்.
பின்னர் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டதை அடுத்து பாஜக மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் தலைமையில் பாஜகவினர் காவல்துறையை கண்டித்து மருத்துவ கல்லூரி வல்லம் சாலை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தின் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
10ஆம் வகுப்பில் 487 மதிப்பெண்
இது குறித்து மைக்கேல்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயராஜ் கூறுகையில், ”இறந்த மாணவி எட்டாம் வகுப்பு முதல் இப்பள்ளியில் படித்து வந்த நிலையில் விடுதியில் உள்ள அனைத்து பொறுப்புகளையும் திறம்பட செய்து வந்தார். அவர்தான் பத்தாம் வகுப்பில் 487 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக வந்ததார்.
அதனால் அந்த மாணவிக்கு எப்போதுமே பள்ளி மற்றும் விடுதியில் தனி ஒரு இடம் அனைவரிடமும் இருந்தது, அந்த மாணவி அவர் வீட்டிற்கு செல்ல விரும்பவில்லை என்பதால் அவருக்கு கடந்த கிறிஸ்துமஸ் அன்று 1,500 ரூபாய்க்கு துணிகள் வாங்கி வார்டனே கொடுத்துள்ளார்.
12ஆம் வகுப்பிற்கு மேல் படிக்க என்ன செய்வேன் என்று வருத்தத்தைத் தெரிவித்த போது அவரைக் கடலூரில் உள்ள கல்லூரியில் சேர்த்து படிக்க வைப்பதாகவும் தெரிவித்தோம். ஆனால் மேற்படிப்பிற்கு செல்லவிடாமல் வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுவார்களோ என்ற பயத்தில் என்று யாருக்கும் தெரியாமல் பூச்சி மருந்தை குடித்ததில் இப்படி பரிதாபமாக இறந்துள்ளார்”எனத் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வெவ்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே திருக்காட்டுப்பள்ளி அருகில் இருக்கும் மைக்கேல்பட்டியில், இன்று தஞ்சை டிஐஜி கயல் விழி மற்றும் எஸ்பி ரவளி பிரியா கந்த புனேனி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்து நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.