தமிழ்நாடு முழுவதும் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆங்காங்கே சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், திருச்சிற்றம்பலம் பகுதியில், சட்ட விரோதமாகப் பதுக்கி வைத்து விற்கப்பட்ட 434 மதுபான பாட்டில்களை, காவல்துறையினர் மே 8ஆம் தேதி பறிமுதல் செய்தனர். ஆனால், அதை முறையாக வழக்குப் பதிவு செய்யாமல், தொடர்புடைய நபரை கைது செய்வதை விடுத்து, எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்களை காவல்துறையினர் வேறொரு நபரிடம் விற்று அதில் கிடைத்த பணத்தை பங்கு போட்டுக்கொண்டதாக புகார் எழுந்தது. இந்தப் புகார் குறித்து தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி., பிரவேஷ் குமார், உத்தரவின் பேரில், பட்டுக்கோட்டை டி.எஸ்.பி., புகழேந்தி கணேசன் விசாரணை மேற்கொண்டார். மேலும் சிசிடிவி காட்சிகள் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணை முடிவில் காவல்துறையினர் பறிமுதல் செய்து மதுபானங்கள் வேறொரு நபரிடம் விற்றது உறுதியானது. இதனையடுத்து திருச்சிற்றம்பலம் காவல்நிலைய ஆய்வாளர் அனிதா கிரேசி, உதவி காவல் ஆய்வாளர் ராஜ்மோகன், சிறப்பு காவல் ஆய்வாளர் துரையரசன், தலைமை காவலர் ராமமூர்த்தி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து டி.ஐ.ஜி., பிரவேஷ் குமார் உத்தரவிட்டார். இதுகுறித்து துறைரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.