தஞ்சாவூர்: உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலை எழுப்பிய மாமன்னன் இராசராச சோழனின் 1038வது சதய விழா பெரிய கோயிலில் அக்.24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் முக்கிய நிகழ்வாக, சுவாமி திருவீதி உலா நேற்று இரவு (அக்.25) கோலாகலமாக நடைபெற்றது.
அருள்மிகு பெருவுடையார் பெரியநாயகி, திருவுருவ செப்பு திருமேனிகள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், மாமன்னர் ராசராச சோழன் அவையில் கோயில் தலைமை நிர்வாகியாக இருந்து, பொய்கை நாட்டு கிழவன் சூரியன் ஆதித்தனாகிய தென்னவன், மற்றும் பட்டத்தரசி லோகமாதேவி திருமேனிகளும், காஞ்சி காமகோடி பீடம் சங்கராச்சாரியார் சுவாமிகளால் அளித்த தங்க கிரீடத்துடன் தஞ்சையின் நான்கு ராஜ வீதிகளில் உலா நடைபெற்றது.
முன்னதாக புஷ்ப அலங்காரத்தால் அலங்கரிக்கப்பட்ட சுவாமிகளுக்கு பூஜைகள் செய்து, மகாதீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் மங்கள வாத்தியங்கள் இசைக்க, 50க்கும் மேற்பட்ட இசைக்கருவிகளுடன் சிவகணங்கள் இசைக்க, கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் சுவாமி புறப்பாடு ராஜவீதிகளான மேல வீதி, வடக்கு வீதி, கீழ வீதி, தெற்கு வீதி ஆகிய பகுதிகளில் வீதி உலா நடைபெற்றது.
இதில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சதய விழா முன்னிட்டு, கடந்த இரண்டு நாட்களும் தஞ்சாவூர் பெரிய கோயில் மற்றும் தஞ்சை மாநகரம் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்டு, விழாக் கோலமாக காணப்பட்டது.
மாமன்னர் ராஜராஜ சோழனின் 1038வது சதய விழாவையொட்டி, பெரிய கோயிலில் மங்கள இசை, களிமேடு அப்பர் பேரவை வழங்கிய திருமுறை அரங்கம், கருத்தரங்கம், குரலிசை, திருமுறை பண்ணிசை, நாத சங்கமம், தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் 1038 பரதநாட்டியக் கலைஞர்கள் பங்கு பெற்ற மாபெரும் சிறப்பு பரதநாட்டிய நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றன.
மேலும் திருக்கோயில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்குதல், மாமன்னர் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்தல் நிகழ்ச்சி, திருமுறை திருவீதி உலா வருதல், அருள்மிகு பெருவுடையார், அருள்மிகு பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் மற்றும் பெருந்தீப வழிபாடு போன்றவை நடைபெற்றது.
மேலும் நடன நிகழ்ச்சி, தேவார இன்னிசை, நாட்டியாஞ்சலி, நாத சங்கமம், சதயவிழா குழு சார்பில் மாமன்னன் இராசராசன் விருது, சமயமே, சமூகமே என்ற தலைப்பில் பட்டிமன்றம் ஆகியவை நடைபெற்றது. இதனையடுத்து இரவு அருள்மிகு பெருவுடையார், பெரியநாயகி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும், இராஜராஜ சோழன், லோகமாதேவி புஷ்ப அலங்காரத்திலும், இராஜேந்திரச் சோழன் தங்க கிரீடத்துடன் புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளி, வீதி உலா நடைபெற்று சதய விழா நிறைவு பெற்றது.
இதையும் படிங்க: நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயிலில் பயணிப்பவர்கள் யார்? - தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்!